"பதவி பறிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதே தவறு" - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
தூத்துக்குடியில் நடந்த விசிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "சுதர்சன் ரெட்டி இன்று சென்னை வருகிறார். கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இந்த தேர்தலை பாஜக அரசு தினித்துள்ளது.
ஏற்கனவே துணைத்தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலக வைத்து சிறை வைத்துள்ளனர். ஜெகதீப் தன்கர் நிலை என்ன என்பது கூட தெரியவில்லை. குடியரசுத் தலைவருக்கே இந்த நிலை என்றால் குடிமக்களுக்கு என்ன நிலை என்பதை எண்ணி பார்க்க வேண்டும். தமிழர் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக ஆக்குவோம் என்று ஒரு சிலர் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
இது தமிழ்நாட்டிற்கான தலைவர் பதவி அல்ல இந்தியாவிற்கான தலைவர் பதவி எனவே இதனை தமிழர் என்கிற அடையாளம் முன்னிநிறுத்துவதில் எந்த பலனும் கிடையாது. பாஜகவா, பாஜக அல்லாத ஜனநாயக சக்திகளாக என்று தான் அணுக வேண்டியுள்ளது. சுதந்திரமாக அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்து வழங்க உள்ள ஒருவரை குடியரசுத் துணைத் தலைவராக காட்ட வேண்டும்.
சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கிறோம். விசிக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். மின்னஞ்சல் மூலமாக கேட்டுகொண்டுள்ளேன். இந்த தேர்தல் வழக்கமான சராசரியான தேர்தலாக அல்லாமல் தன்கருக்கு நேர்ந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக சிந்தித்து சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் விசிக இரட்டை நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை. ஒரே நிலைப்பாடுதான்.
அதே வேளையில் மாற்று வழியை தொலைநோக்கு பார்வை அடிப்படையில் முன்வைக்கிறோம். அரசாணை 152 பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதனை புதுப்பிக்க வேண்டும் என்று போராடிவரும் ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. தனியார் மயத்தை எதிர்த்து மக்களோடு போராடிக் கொண்டிருக்கிற இயக்கம் விசிக. சென்னை துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்து ஆதரவாக இருக்கிறோம். முதல்வரை சந்தித்து தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம்
அந்த தொழிலையே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக நிரந்தரப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான் மாற்றுக் கருத்தை முன்வைத்தோம் அதை புரிந்து கொள்ளாமல் தூய்மை பணியாளர்களுக்கு எதிரான கருத்து என்று தவறான சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது இது அதிர்ச்சியாக உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் தொழிலாக நிரந்தர படுத்தி விடக்கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அந்த பணியை செய்ய ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையில் இரண்டாவது கருத்தாக முன் வைக்கிறோம்.
கண்ணகி நகரில் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குழந்தைகளின் உயர்கல்வி வரை செலவிற்க்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். வரலட்சுமி குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குடும்பத்திற்க்கு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும். அரசு சார்பிலும் கூடுதல் உதவி வழங்க வேண்டும்.
30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவி பறிக்கும் புதிய சட்டம் குறித்த கேள்விக்கு, இந்த சட்டம் மிகவும் கொடிய சட்டம். பாசிசத்தின் உச்சம். இதனை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியதே தவறு. பாஜக அரசு பாசிச அரசு என்பதற்கு இந்த சட்டமே ஒரு சாட்சி என்று தெரிவித்துள்ளார்.