பாஜகவின் தூண்டுதலின்பேரில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறாரா? - பி.வில்சன் எம்.பி பேட்டி!
ஆளுநர் அவரா செய்கிறாரா அல்லது பாஜகவின் தூண்டுதலின்பேரில் செய்கிறாரா என்பதை அவர் தான் விளக்க வேண்டும் என மாநிலங்களவை திமுக உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ஆளுநருக்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆளுநர் மீது வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே மீண்டும் அவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்ய வேண்டும் என கடிதம் எழுதி இருந்தார்.
அதற்கு ஆளுநர் பதில் கடிதம் எழுதி இருந்தார். அதில் பொன்முடி அமைச்சராக நியமிக்கப்பட்டால் இது அரசமைப்பு அறநெறிக்கு எதிரானது. எனவே தன்னால் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார். எனவே கடிதத்தை ரத்து செய்து, பொன்முடிக்கு பதவி நியமனம் செய்யக்கோரி இன்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு வழங்கி இருக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தான் அவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுப்போன்று தண்டனை அறிவிக்கப்பட்டு பின்னர் மேல்முறையீடு செய்து, தடை பெற்று இருக்கும் வழக்கில் மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ராகுல்காந்தி வழக்கிலும் உயர்நீதிமன்றம் தண்டனை பிறப்பித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைத்தது. இது போன்ற பல வழக்குகளில் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் ஆளுநர் அவருக்குத் தெரிந்த சில சட்ட புத்தகங்கள் மட்டும் படித்து அதன்படியே நடந்து கொள்கிறார்.
பல விஷயங்கள் இதுபோன்று அவர் வேண்டுமென்று செய்கிறாரா? தெரியாமல் செய்கிறாரா? என்பது தெரியவில்லை. சட்டப்பிரிவு 164-ன் படி முதலமைச்சர் கூறும் நபரை தான் ஆளுநர் அமைச்சர்களாக பதவி நியமனம் செய்ய வேண்டும். ஆளுநருக்கு யாரை அமைச்சராக வேண்டும் என்ற அதிகாரம் இல்லை. சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மீண்டும் எம்.எல்.ஏ. பதவியை பொன்முடிக்கு வழங்கியுள்ளார். அதேபோல தேர்தல் ஆணையமும், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்கவில்லை.
தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவார்கள் போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இதற்கு முன்பு செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளிலும், ஆளுநர் கடிதத்தை எழுதுவார் பின்பு ஆலோசனை செய்து அனுப்புவதாக கடிதத்தை திரும்ப பெறுவார். ஆளுநர் அவரா செய்கிறாரா? அல்லது பாஜகவின் தூண்டுதலின்பேரில் செய்கிறாரா? என்பதை அவர்தான் விளக்க வேண்டும். அரசியலமைப்பு கூறும் எதையும் ஆளுநர் பின்பற்றுவதில்லை. ஆர்.என்.ரவி ஆளுநருக்கான வேலைகளை செய்யாமல் மற்ற அனைத்தையும் செய்து மக்கள் பணத்தை வீணாக்கி வருகிறார்”
இவ்வாறு பி.வில்சன் எம்பி தெரிவித்தார்.