”திமுக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை” - எடப்பாடி பழனிச்சாமி..!
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் உதகை ஏடிசி பகுதியில் பரப்புரையை செய்தார். அப்போது பேசிய அவர்,
”ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் உதகை தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? ஆனால், அதிமுக ஆட்சியில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 50 சதவீதம் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவடைந்த நிலையில், திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வகையில் திறந்து வைத்தவர் மு க ஸ்டாலின். உதகையில் வியாபாரிகள் பாதிக்கும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்த உடனே நீதிமன்றம் குறிப்பிட்ட அளவிலேயே வாகனங்கள் வருவதற்கு இ பாஸ் நடைமுறையை கொண்டு வந்தது. இத்னால் இங்கு உள்ள வியாபாரிகளுக்கு வருவாய் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. ஏழை எளிய மக்களுக்கு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத இந்த திமுக அரசு எந்தெந்த தொழிலில் கொள்ளையடிக்கலாம் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டு வருகின்றது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிமுக ஆட்சியில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் எந்த உணவு பொருள் விலை உயர்வு ஏற்படுகிறதோ அந்த உணவுப் பொருள் எம்மாநிலத்தில் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது என அறிந்து அங்கு அந்த பொருட்களை கூட்டுறவுத் துறை மூலம் அங்கேயே சென்று கொள்முதல் செய்து ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.தைப்பொங்கலுக்கு பிரம்மாண்டமான பொங்கல் தொகுப்பு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் வெள்ளம் உட்பட பொங்கல் தொகுப்பு பொருள்கள் முறையாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதிலும் ஊழல் செய்தது திமுக அரசு. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் வீடுகளை கனவுகளால் கட்டி மகிழ்ந்து கொள்ளலாம் நிஜத்தில் வீடு கட்ட முடியாது. திமுக ஆட்சியில் ஒரு யூனிட் எம் சென்ட் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சியில் ஒரு யூனிட் எம் சென்ட் 5000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு யூனிட் ஜல்லி 4500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது” என்றார்.