விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டி என வெளியாகும் தகவல் - உண்மை என்ன?
This news fact checked by Newschecker
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடப்போவதாக வைரலாகி வரும் பதிவு உண்மை இல்லை என கண்டறியப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி திடீரென உயிரிழந்த நிலையில் அத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல பதிவுகள் வைரலாகி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து ஆய்வு செய்ய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவிருப்பதாக நியூஸ்கார்டுகள் வைரலானதை தொடர்ந்து, இத்தகவல் உண்மையானதா என அறிய பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு விசாரிக்கப்பட்டது. அவர் இத்தகவல் தவறானது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டுகள் புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைகாட்சியின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்டுகள் பகிரப்பட்டுள்ளதா என தேடப்பட்டது.
இத்தேடலில் இவ்விரு நிறுவனங்களிலும் வைரலாகும் நியூஸ்கார்டுகள் வெளியிட்டிருக்கப்படவில்லை என அறிய முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் தந்தி தொலைக்காட்சியில் பாஜக கூட்டணியிலிருந்து பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
முடிவு:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவிருப்பதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்று கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.