For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும்" - குடியரசு தலைவருக்கு காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை!

08:29 PM Nov 19, 2024 IST | Web Editor
 மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும்    குடியரசு தலைவருக்கு காங்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
Advertisement

மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அங்கு அமைதியை நிலைநாட்ட அவர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து கார்கே குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள இரண்டு பக்க கடிதத்தில்,

“கடந்த 18 மாதங்களாக மணிப்பூரில் சட்ட ஒழுங்கையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மணிப்பூர் அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்துவிட்டது. அம்மாநில மக்கள் தங்கள் வீடுகளில் கண்ணியத்துடனும், அமைதியாக வாழ்வதையும் உறுதி செய்ய குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்.

மணிப்பூரில் நடந்த வன்முறையில் பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், உள்நாட்டில் ஒரு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வெவ்வேறு நிவாரண முகாம்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்களின் துயரம் முடிவில்லாமல் தொடர்கிறது.

நமது அரசியலமைப்பின் பாதுகாவலர் என்ற முறையில், அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்துவும், மக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குடியரசுத் தலைவர் என்ற முறையில் நீங்கள் உடனடியாக மணிப்பூர் பிரச்சினையில் தலையிடுவது கட்டாயம். உங்களின் இந்த நடவடிக்கை மூலம் மணிப்பூர் மக்கள் கண்ணியத்துடன் பாதுகாப்பாக வாழ வழி ஏற்படும் என்று நான் நம்புகிறேன்” என்று கார்கே கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement