“இந்தியா சுதந்திரம் பெற்றது ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் ஒப்படைக்க அல்ல” - வயநாட்டில் ராகுல் காந்தி பரப்புரை!
இந்திய நாடு சுதந்திரம் பெற்றது ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் ஒப்படைக்க அல்ல என வயநாடு எம்.பி-யான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நேற்று (ஏப். 15) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதற்காக மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பகுதியான தாளூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார். நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை நிறைவடைந்ததை அடுத்து அங்கிருந்து செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்கு சென்றார் ராகுல் காந்தி. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அவர் சந்தித்தார். பின்னர் வயநாடு புறப்பட்டு செல்லும் அவர் சுல்தான் பத்தேரி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர்,
”பிரதமர் நரேந்திர மோடி, ’ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி, ஒரே தலைவர்’ என பேசுகிறார். ஏனென்றால் அவர் இந்திய அரசியலமைப்பை தவறாக புரிந்து வைத்திருக்கிறார். மொழி என்பது மேலிருந்து கீழாக திணிக்கப்படுவது அல்ல. ஒவ்வொருவரின் இதயத்தில் இருந்தும் வெளிவருவது அது. உத்தரப்பிரதேசத்தில் இருப்பவர்களோ, கேரளாவில் இருப்பவர்களோ, அனைவருக்கும் அவர்களது மொழியை பெருமைப்படுத்தி கூற உரிமை உண்டு.
இந்தியா என்பது பல நிறங்கள் கொண்ட பூக்கள் கொண்ட ஒரு பூங்கொத்து போன்றது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சொல்வது போல் இந்தியாவிற்கு ஒரே தலைவர் தான் இருக்க வேண்டும் என்று சொன்னால் அது அனைத்து இந்தியர்களையும் அவமதிக்கும் செயல். நாங்கள் டெல்லியில் ஆட்சியில் இல்லை, கேரளாவிலும் ஆட்சியில் இல்லை. இந்த ஒரே காரணத்திற்காக வயநாடு தொகுதியை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் இரு அரசுகளும் கையாளுகின்றனர்.
எங்கள் தேர்தல் அறிக்கையில் அனைவருக்குமான பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்கு தீர்வாக திட்டங்களை கூறியிருக்கிறோம். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டால், ஒன்று சந்திரனுக்கு மனிதனை அனுப்புவோம், இரண்டாவதாக ஒலிம்பிக்கை இந்தியாவில் நடத்துவோம் என்பார். இதைத்தவிர வேறு எந்த வாக்குறுதியையும் அவர்களால் தர முடியாது. இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றது ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் ஒப்படைப்பதற்காக அல்ல. இந்தியாவை, இந்தியர்கள் அனைவரும் ஆள்வதையே விரும்புகிறோம்” என்றார்.