“பா.ஜ.க யுக்திகளுக்கு ஈடாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை” - கார்த்தி சிதம்பரம் எம்.பி!
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு எம்பி கார்த்தி சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம்,
“பா.ஜ.க யுக்திகளுக்கு ஈடாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை. இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டை தவிர, மற்ற மாநில கட்சிகள் எல்லாம் ஒருமித்த
கருத்திற்கு வரவில்லை. சரத்பவார், மம்தா உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் முழுமையாக இணைந்து செயல்படுவதில்லை. இதை மையப்படுத்தி தான் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது நீதிமன்ற தீர்ப்பு. இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக நிதி கொடுப்பதை யாரும் குறை சொல்ல கூடாது.
பொள்ளாச்சி வழக்கு, அண்ணா பல்கலைக்கழக வழக்கு இரண்டுமே மிரட்டி செய்யப்பட்ட காரியம்தான் என்றாலும் வெவ்வேறு அளவுகோல் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக வழக்கையும் நியாயமான முறையில் நடத்தி நியாயமான தீர்ப்பு
வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
தமிழகத்தின் பொருளாதாரத்தை சீர்படுத்த வேண்டும் என்றால் மின்சார வாரியத்தில் இருக்கும் 1 லட்சம் கோடி அளவிலான கடனை குறைக்க வேண்டும்.
கல்வி கடன் தள்ளுபடி என மாநில அரசு வாக்குறுதி கொடுத்தாலும் மத்திய அரசே கல்வி கடன்களை தள்ளுபடி செய்யும் அதிகாரம் என்பது உள்ளது.
கல்விக்கடன் ரத்து, மாத, மாதம் மின்சார கட்டணம் கணக்கீடு என்பது, 15 லட்ச
ரூபாய் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் போடப்படும் என்பது எப்படியோ அப்படித்தான் அந்த வாக்குறுதியையும் மாநில அரசு வழங்கியுள்ளது” என தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி குறித்து ப.சிதம்பரம் கருத்து,
“இண்டியா கூட்டணியின் ஒற்றுமை அப்படியே இருக்கிறதா என்பது குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அதன் எதிர்காலம் பிரகாசமாக இல்லை” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் கூறியிருந்தார்.