”பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்க கூடாது”- ஓபிஎஸ் பதில்
ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில்
மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படைவதால், இருதரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “காவிரி ஆற்று படுகை ஒரு பன்மாநில ஆறாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரு ஆறு இரண்டு, மூன்று மாநிலங்கள் வழியாக ஓடுகின்ற போது, அதில் அந்த மூன்று மாநிலங்களுக்கும் உரிமை இருக்கிறது. அதிலிருந்து ஒரு அரசு மீறுவது என்பது இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாக தான் அர்த்தம். அவர்கள் எந்த வித உயர்ந்த பதவியில் இருந்தாலும் இந்திய அரசியல் சட்டத்தை யாரும் மீறக் கூடாது என்பதுதான் நம்முடைய சட்டம். இந்த விவகாரத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கையாக உள்ளது” என தெரிவித்தார்.
தமிழ்நாடு மீனவர்கள் கைது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தொடர்கதையாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் செல்வது வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் இருக்கிறது. இதனால் தமிழகத்தின் மீனவர்கள் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண தமிழ்நாடு முதல்வர் மற்றும் பிரதமரும் இலங்கை அரசை தொடர்பு கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
ஆளுநர் மீது தமிழக அரசு வழக்கு தொடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில்
மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படையும் சூழல் இருக்கிறது. இருதரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும்.
புதிய கட்சி தொடங்குவதற்காக தேவரிடம் வேண்டிக் கொண்டீர்களா என்ற கேள்விக்கு, கனவு காண்பதற்கு நீங்கள் கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்வது என்றார்.
பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்க கூடாது. நேற்று முன்தினமே நான் சமூக வலைதளங்கள் மூலமாக பசும்பொன் என்கிற புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எந்தவித தொந்தரவு துயரத்தை கொடுக்கக் கூடாது என்பதை தெரிவித்து இருக்கிறேன். இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது.
பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றோர் விடுதலை மற்றும் நீட் தேர்வு ரத்துக்காக
பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் கூறியது குறித்த கேள்விக்கு:
அது தீர்வாகாது. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு கவர்னர் மாளிகை
மீது குண்டு வீசுவது தீர்வாகாது அது மிகவும் கண்டனத்திற்குரியது என
தெரிவித்து விட்டு புறப்பட்டுச்சென்றார்.