For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக.... தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்து...

07:35 AM Mar 19, 2024 IST | Web Editor
பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக     தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்து
Advertisement

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. 

Advertisement

மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

இதனிடையே, அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக உடன் பாமக  இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு, இரு கட்சி தலைவர்கள் சந்தித்து ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும், 12 முதல் 14 தொகுதிகள் வரை பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் சந்தித்து பாஜகவுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசினர். பாமக தலைவர் ஜி.கே.மணி, சிவக்குமார், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என உறுதியளிப்பட்டதை தொடர்ந்து இரு கட்சிகளும் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. 

தருமபுரி,  அரக்கோணம்,  திண்டுக்கல்,  ஆரணி,  கடலூர்,  ஸ்ரீபெரும்புதூர்,  மத்திய சென்னை உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தமாகா,  இந்திய ஜனநாயக கட்சி,  தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம்,  புதிய நீதிக்கட்சி ஆகியவை இணைந்துள்ளன.  நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார்.

Tags :
Advertisement