“ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக 180 சீட்டை தாண்டாது!” - பிரியங்கா காந்தி
ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக இந்த முறை நிச்சயம் 180 சீட்டை தாண்டாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் சஹாரன்பூரில் இன்று பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது:
400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பாஜகவினர் கூறியிருந்தனர். எதன் அடிப்படையில் இது சொல்லப்பட்டது? அப்படி சொல்பவர்கள் ஒன்று ஜோசியராக இருக்க வேண்டும், இல்லையெனில் முன்கூட்டியே ஏதாவது தில்லுமுல்லு வேலையை பார்த்து வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவ்வளவு உறுதியாக சொல்ல முடியும். இப்போது நடைபெறும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு எதுவும் நடக்காது என்று உறுதியாக சொன்னால், பாஜக 180 தொகுதிகளை கூட தாண்டாது.
எங்களை பொறுத்த அளவில், நாங்கள் மக்கள் பார்வையில் தேர்தலை அணுகுகிறோம். மக்கள் பிரச்னையை மையப்படுத்திதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இங்கே என்ன நடக்கிறது? வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் பற்றி பாஜக பேசுகிறதா? விவசாயிகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னை பற்றி அவர்கள் பேசுகிறார்களா? மாறாக மக்களின் மனதை திசை திருப்புவதற்காக திறமையாக பேசுகிறார்கள்.
மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியையும் பார்க்கவில்லை. சுருக்கமாக சொல்வதெனில் பிரதமர் மோடி மக்களுடனான தன்னுடைய தொடர்பை துண்டித்துவிட்டார். இந்த அரசியலை மக்கள்தான் மாற்ற வேண்டும்" என்று பிரியங்கா காந்தி பேசினார்.