“எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால்...” - சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!
எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால் இந்நேரம்.. தேசதுரோகிகளாக! பாகிஸ்தான் கைக்கூலிகளாக! அர்பன் நக்சல்கலாக! காலிஸ்தான் ஆதரவாளர்களாக ஆக்கப்பட்டு உயர்மட்ட விசாரணையில் இருந்திருப்போம் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த டிச. 13-ம் தேதி அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2 பேர், இருக்கைகளின் மீது ஏறி சபாநாயகர் மாடத்தை நோக்கி ஓட முயற்சித்தனர். அவர்கள் கண்ணீர் புகை குப்பிகளை மக்களவையில் வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவலர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து அவர்களை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு காவலர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை, மக்களவைக்குள் புகுந்த இருவர் பயன்படுத்தியதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் (டிச. 14) எதிர்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அமலியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி ஒருவர், மற்றும் மக்களவையில் தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
எதிர்கட்சி உறுப்பினர்கள்
பாஸ் வழங்கி இருந்தால்
இந்நேரம்..
தேசதுரோகிகளாக!
பாகிஸ்தான் கைக்கூலிகளாக!
அர்பன் நக்சல்கலாக!
காலிஸ்தான் ஆதரவாளர்களாக ஆக்கப்பட்டு உயர்மட்ட விசாரணையில் இருந்திருப்போம்.பாஸ் வழங்கியது
ஆளுங்கட்சி உறுப்பினராதலால் நாங்கள் காந்திசிலை முன்னால் போராடும்… pic.twitter.com/Utes4LFDmR— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 15, 2023
தொடர்ந்து நேற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஸ் வழங்கி இருந்தால் இந்நேரம்.. தேசதுரோகிகளாக! பாகிஸ்தான் கைக்கூலிகளாக! அர்பன் நக்சல்கலாக! காலிஸ்தான் ஆதரவாளர்களாக ஆக்கப்பட்டு உயர்மட்ட விசாரணையில் இருந்திருப்போம். பாஸ் வழங்கியது ஆளுங்கட்சி உறுப்பினராதலால் நாங்கள் காந்திசிலை முன்னால் போராடும் இடைநீக்கப்பட்ட உறுப்பினர்களாகியுள்ளோம்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், “பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே! அவையில் மட்டுமல்ல.. பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது. ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம். இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு.” எனவும் பதிவிட்டுள்ளார்.