"திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக வைத்தால் மதவாத கட்சியா?" - இபிஎஸ் கேள்வி
கோவை மேட்டுப்பாளையத்தில் பேருந்து மூலம் இபிஎஸ் ரோடு ஷோ நடத்தினார். அப்போது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் இருந்தனர். பின்னர் இபிஎஸ் பேசியதாவது,
"அதிமுக - பாஜக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும். திமுக ஆட்சி வரும் தேர்தலில் அகற்றப்பட வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வீடுகளில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. அஜித்குமார் என்ற இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். திமுக ஆட்சியில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பே இல்லை.
எதிரிகளை வீழ்த்த, வாக்குகள் சிதறாமல் இருக்க அமைப்பதுதான் தேர்தல் கூட்டணி. இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளன. தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொண்டு வருவோம். அதிமுக, பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.