“பாஜக வந்துவிட்டால் இந்தி வந்துவிடும் என்ற பல்லவியை மட்டுமே திமுக காங்கிரஸ் கூட்டணியினர் பாடுகிறார்கள்” - நெல்லையில் பிரதமர் மோடி பரப்புரை!
திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருப்பது ஒரு டேப் ரெக்கார்டர். அதில் பாஜக வந்துவிட்டால் இந்தி வந்து விடும் என்ற பல்லவியை மட்டும் பாடிக் கொண்டிருக்கிறார்கள் என திருநெல்வேலியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள அகஸ்தியர் பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்பரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரையாற்றினார்.
பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது:
“உங்கள் ஆதரவை பார்த்து இந்தியா கூட்டணிக்கு தூக்கம் கலைந்துவிட்டது. நேற்று கொண்டாடப்பட்ட தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். பல நல்ல திட்டங்களை உங்களுக்காக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மூன்று கோடி வீடுகள் கட்டி தர திட்டம், முத்ரா கடன் வழங்கும் திட்டம், புதிய உற்பத்தி மையங்களை உருவாக்குதல், மீனவர்கள் கடல்பாசி மற்றும் முத்து வளர்த்தல் உள்ளிட்ட திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளோம்.
தென் பகுதியிலும் புல்லட் ரயில்கள் இயக்குவதற்கான யோசனை செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருக்கும் தாய்மார்கள், சகோதரர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு கோடியே 85 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்திருக்கிறோம். 40 லட்சம் பேருக்கு கேஸ் இணைப்பு கொடுத்துள்ளோம். கர்ப்பிணி பெண்களுக்கு 800 கோடி ரூபாயில் நிதியுதவி. தமிழ்நாட்டில் திருவள்ளுவர் என்ற கலாச்சார மையம் ஏற்படுத்தப்படும். தமிழுக்கு உலக அளவில் அங்கீகாரம் அளிக்கப்படும்.
தமிழர்கள் பண்பாட்டு வரலாற்றை அழிக்க திமுக காங்கிரஸ் கூட்டணியினர் நினைக்கிறார்கள். செங்கோல், ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றை அவர்கள் எப்படி எதிர்த்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். தென் தமிழ்நாட்டில் நான் நினைக்கும்போது நினைவுக்கு வருவது வீரமும், தேசப்பற்றும் தான். மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலு நாச்சியார் ஆகியோர் அண்ணிய ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்கள்.
ஜி 20 போன்ற உலக மாநாடுகள் இந்தியாவில் நடைபெற்றது நம் நாட்டிற்கு பெருமை. நாட்டில் பாஜக தான் ஒவ்வொரு மனிதருக்கும் பிடித்த கட்சியாக இருக்கும். பாஜக தமிழ் மொழியையும், தமிழ்நாட்டின் மக்களையும் மிகவும் நேசிக்கும் கட்சி. தமிழக மக்கள் மீது மாறாத அன்பை கொண்டு இருக்கும் கட்சி பாஜக. இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்று போராடிய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை எங்களுக்கு உத்வேகம் கொடுக்கிறார். அவர் காட்டிய வழியில் இன்று இந்தியா பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற்றுக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸும், திமுகவும் காமராஜரை அவமதித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் லட்சியம் தூய்மையான அரசியல். எம்ஜிஆர் பாரம்பரியத்தை திமுக தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறது. தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் பழமையான கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறோம். நான் உங்களிடம் இருந்து நான் வேறுபட்டவன் இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி தேச விரோத செயல்களை செய்திருக்கிறது.
தமிழ்நாட்டின் உயிர்நாடியான கச்சத்தீவை துண்டித்து வேறு நாட்டிற்கு வழங்கியுள்ளனர். ரகசியமாக திரை மறைவாக செய்த இந்த வரலாற்றுப் பிழை மன்னிக்க முடியாத ஒன்று. இதை ஆவணங்களோடு பாஜக சமீபத்தில் அம்பலப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு போதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. போதை மருந்தை குடும்ப அரசியல் செய்பவர்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் போதை என்ற நரகத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். போதை என்ற விஷம் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கிறது. பல கோடி ரூபாயில் போதை விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தத் தேர்தல் பரப்புரை கூட்டம் தான் நான் உங்களை சந்திக்கும் கடைசி பரப்பரைக் கூட்டம். ஏனென்றால் தமிழ்நாட்டில் 19-ம் தேதி தேர்தல். திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருப்பது ஒரு டேப் ரெக்கார்ட். அதில் பாஜக வந்துவிட்டால் இந்தி வந்து விடும் என்ற பல்லவியை மட்டும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். முதல் நிலை வாக்காளர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். ஒரே ஒருமுறை பாஜகவிற்கு வாக்களியுங்கள். என்னுடைய இலக்கு 2047.
உங்களுடைய ஆதரவை பார்த்து ஆட்சியில் இருக்கும் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. பாஜக நிர்வாகிகள் பயப்பட வேண்டாம். மொத்த தமிழ்நாடும் உங்களோடு இருக்கிறது. நானும் உங்களோடு இருக்கிறேன். இங்கே போட்டியிடுபவர்கள் உங்களுடைய குரலை டெல்லியில் ஒலிப்பார்கள். இவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்களது பொறுப்பு”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.