"பாஜகவினரை அண்ணாமலை தூண்டிவிட்டால் போதும், எடப்பாடி முதலமைச்சராக வருவார்" - செல்லூர் கே.ராஜு!
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மதுரை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 8,000 கோடி ரூபாய்க்கான திட்டங்களை அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தந்துள்ளார். 24 மணி நேரம் தூய்மையான குடிநீர் கிடைக்கும் முல்லைப் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளார்.
இளநீரை போல சுத்தமான குடிநீர் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் கிடைத்துள்ளது. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்த தர்மபிரபுவாக எடப்பாடி பழனிச்சாமி திகழ்கிறார். திமுக காழ்புணர்ச்சியின் காரணமாக மாநகர பகுதிகளில் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஊழல் நிறைந்த மாநகராட்சியில் தீர்மானங்கள் கொண்டு வருவது வேடிக்கையான ஒன்றாக உள்ளது. சொத்துவரி முறைவேடு விவகாரத்தில் உலகமே மதுரை மாநகராட்சி மீது புகார் கூறுகிறது. கோயில் மாநகராட்சியாக இருந்த மதுரை மாநகராட்சி துப்பறி மாநகராட்சியாக மாற்றியது திமுக அரசு.
ஊழல் மேயர் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வருவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம். பாஜகவினரை அண்ணாமலை தூண்டிவிட்டால் போதுமானது, 2026 ல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார்" என்று தெரிவித்துள்ளார்.