“அண்ணாமலை புயலாக இருந்தால் நான் தென்றல்” - பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்ற பின் நயினார் நாகேந்திரன் பேச்சு!
தமிழ்நாடு பாஜக புதிய மாநில தலைவர் பதவி ஏற்பு விழா, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று(ஏப்ரல்.12) நடைபெற்று வருகிறது. இதில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றார். மேலும் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், சரத் குமார் ஆகியோர் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்வில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சின்போது நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி பாஜக. 1000க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள். 250க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட இக்கட்சியில் இன்றைக்கு மாநில தலைவர் பதவியில் என் மீது நம்பிக்கை வைத்து தலைவர் பதவி அல்ல, தலைமை தொண்டனாக தேர்ந்தெடுத்ததற்கு தேசிய தலைவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்தாலி கொள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்டெடுத்த மகான், மாபெரும் தலைவர் மோடிக்கு என்னுடைய வணக்கம். இந்த மேடையில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்று சொன்னால் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, வாஜ் பாய் போன்ற தலைவர்களின் தியாகத்தில் வளர்ந்த இந்த இயக்கத்தில் நானும் ஒரு தலைமை தொண்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வளவு தொண்டர்கள் இங்கு உருவாவதற்கு காரணம், கட்சியை மாநில தலைவர்களாக வழிநடத்திய பொன்னார், இல.கணேசன், எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், சி.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோபுரங்களுக்கு அடுக்குபோல் கட்சியை ஒவ்வொரு படியாக வளர்த்து வந்தார்கள். இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக மத்திய இணையமைச்சராக இருக்கும் எல்.முருகன் வேல் யாத்திரை மூலமாக கட்சியை ஒரு அடுக்கு மேலே கொண்டு வந்தார். வானதி சீனிவாசன் கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக இருந்து வழிநடத்தி சென்றார்.
இவை அத்தனைக்கும் மேலாக எண் மண் எண் மக்கள் யாத்திரை மூலமாக தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் நடந்து அந்த கோபுரத்தின் மேல் கலசத்தை வைத்திருக்கிறார் அண்ணாமலை. இப்போது நமக்கு கொடுத்திருக்கும் வேலை கும்பாபிஷேகம் மட்டும்தான். அந்த கும்பாபிஷேகத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் செய்யப்போகிறோம். காலங்கள் செய்யாததை கிரகங்கள் செய்யும் என்பார்கள், அது இப்போது வந்து கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னதுபோல் தமிழ்நாட்டில் NDA ஆட்சி மலர்ந்தே தீரும்.
இணையமைச்சர் முருகன் மாநில தலைவராக இருந்தபோது, 20 சீட்டில் 4 சீட் வென்றோம். இனி வரப்போகும் தேர்தலில் 40 சீட்டுகும் மேல் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.
எனக்கு பயமும் அச்சமும் இருக்கிறது. ஏனென்றால் அண்ணாமலையின் பாணி தனி பாணி. அவர் புயலாக இருந்தால் நான் தென்றல். இந்த ஆட்சியை வெகு விரையில் விரட்டி அடிக்க வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும். ஒவ்வொருவரும் அவர்களின் பூத்-களில் கவனம் செலுத்த வேண்டும். அண்ணமலை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் செருப்பு அணிவேன் என்றார். அவர் செருப்பு அணிய வேண்டும். ஏனென்றால், அமித்ஷா NDA கூட்டணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். நாள் குறிக்கப்பட்டுவிட்டது. 2026 மே மாதத்தில் ஆட்சி மாற்றம் உறுதி அதனால் அவர் செருப்பணியலாம்”
இவ்வாறு புதிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.