"தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி காட்டுவேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கிருஷ்ணகிரி வந்தார். அவ்ருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சிலை, பெங்களூரு சாலை, 5 ரோடு, சென்னை பை-பாஸ் சாலை வரையில் முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. அப்போது பொதுமக்களிடம் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்று கொண்டார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கோடியே 5 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் இணைப்பு சக்கர வாகனத்தை சுமார் 290 மாற்று திறனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து 562 கோடியே 14 லட்சத்து 3000 ரூபாய் மதிப்பிலான 1114 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 270 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் 193 முடிவுற்ற திட்டப்பணிகள், அரசு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில் பேசுகையில், "இரும்பின் தொன்மையை பறைசாற்றிய மயிலாடும்பாறை கொண்ட கிருஷ்ணகிரியில் மாநாடு போல் ஏற்பாடு செய்த பொறுப்பு அமைச்சர் சக்கரபாணிக்கு என் பாராட்டு.
அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு நெல் கொள்முதலை விட 6 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாக கொள்முதல் செய்து தரமான அரிசி வழங்கியும், 7 லட்சத்து 33 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கொள்கைகள் அமைத்த அமைச்சர் சக்கரபாணிக்கு பாராட்டுக்கள். மாவட்ட ஆட்சியரின் சிறப்பான செயல்பாடுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளே சாட்சி என மாவட்ட ஆட்சியர் திணேஷ்குமார் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் இருந்த போது கிருஷ்ணகிரியில் மகளிர் சுய உதவி குழு துவங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி உள்ளோம். இது தான் நமது சாதனை. புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் போனால் மேடையில் இருப்பவர்கள் விடுவார்களா? கெலமங்கலத்தில் புறவழி சாலை அமைக்க சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கப்படும்.
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு மலை கிராமங்களுக்கு 12 கோடியே 43 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைக்கப்படும். ஒசூர் மாநகராட்சியில் NH44 மற்றும் NH844 சாலைகளை இணைக்க சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கப்படும். ஓசூர் LC 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய ரயிவே மேம்பாலம் அமைக்கப்படும்.
மொத்தம் 404 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது, 37 திட்டம் மத்திய அரசின் அனுமதிக்காக உள்ளது. 64 திட்டங்கள் நிதி நிலையால் நிலுவலையில் உள்ளது. இது எல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவில்லை. நீட் விலக்கு இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை. அதை நாங்கள் மறுக்கவில்லை. நீட் விலக்குக்கு கடுமையான சட்ட போராட்டம் நடத்தினோம். நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு சாதகமான அரசு அமையும் என போராடினோம். ஒன்றியத்தில் பாஜக மைனாரிட்டி ஆட்சி அமைத்து உள்ளார்கள். நிச்சயம் ஒரு நாள் நமது மாநிலத்துக்கான ஆட்சி அமையும்.
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்ன என்று எடப்பாடி பழனிச்சாமியால் பட்டியலிட முடியுமா? எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்று முதலீடு ஈர்த்ததாக கூறினார். அதில் கையெழுத்தானதில் பாதி கூட செயல்பாட்டுக்கு வரவில்லை. தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி காட்டுவேன். அதே போல் மக்களை தேடி மருத்துவம் திட்டமும் கிருஷ்ணகிரியில் தான் துவங்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு மேலாக நகர பகுதியில் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் வசித்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. ஊரக பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்ட பட்டா தற்போது நகர பகுதியில் வழங்கி சாதனை படைத்து உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.