கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கிருஷ்ணகிரி வந்தார். அவ்ருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சிலை, பெங்களூரு சாலை, 5 ரோடு, சென்னை பை-பாஸ் சாலை வரையில் முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. அப்போது பொதுமக்களிடம் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்று கொண்டார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கோடியே 5 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் இணைப்பு சக்கர வாகனத்தை சுமார் 290 மாற்று திறனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து 562 கோடியே 14 லட்சத்து 3000 ரூபாய் மதிப்பிலான 1114 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 270 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் 193 முடிவுற்ற திட்டப்பணிகள், அரசு கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.