“அமித் ஷாவை சந்தித்தேன்...மக்கள் நலனுக்காக எதையும் செய்யத் தயார்” - டெல்லியில் அண்ணாமலை பேட்டி!
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை குறித்து டெல்லியில் இன்று(மார்ச்.28) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , மத்திய மீன் வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை சந்தித்து பேசினார். அதன் பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக உடனான பாஜகவின் கூட்டணி மற்றும் தவெக-வின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியது குறித்த கேள்விகள் எழுப்பபட்டது.
அதற்கு அவர் பதிலளித்தபோது , “தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் விடுவிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். மிக முக்கியமாக இன்று மீன்வளத்துறை அமைச்சர் உறுதி கொடுத்திருப்பது என்னவென்றால் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி செயல்படுத்தபோகிறோம் என்றார். குறிப்பாக தமிழ்நாடு மீனவர்களுக்கு ஸ்பெஷம் ஸ்கீம் வேண்டுமென்றாலும் மத்திய அரசு அதை செயல்படுத்தும். இலங்கை கடற்படை சம்பந்தப்பட்ட பிரச்னை குறித்டுஹ் மீன்வளத்துறை அமைச்சரையும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்தோம். இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். எனவே ஆக்கபூர்வமான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தேன், அதே போல் ஜே.பி நட்டாவையும் சந்தோஷையும் சந்தித்தேன், 2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கு முக்கியமான தேர்தல். திமுக செய்யும் தவறுகளை மக்கள் முன்பு வைக்கிறோம். மாநிலத் தலைவராக என்னைப் பொறுத்தவரை, 2026 தேர்தல் தமிழ்நாடு மக்கள் நலனுக்கான தேர்தலாக பார்கிறேன். கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் ரொம்ப தூரம் உள்ளது. கட்சி வளர்ச்சி முக்கியமா? தமிழ்நாடு மக்கள் நலன் முக்கியமா? என்று கேட்டால், மக்கள் நலன் தான் முக்கியமாக இருக்கிறது. அதனால் கூட்டணி குறித்து தகுந்த நேரத்தில் தலைவர்கள் பேசுவார்கள்.
மாநில தலைவராக என்னுடைய கருத்தை பாஜக தலைவர்களிடம் சொல்லி இருக்கிறேன். திமுக 2026ல் ஆட்சியல் இருந்து இறக்குவதுதான் தொண்டர்களின் விருப்பம் என்று சொல்லியுள்ளேன். இப்போது மாநில தலைவர்கள், தேசிய தலைவர்கள் தேர்தல் காலகட்டத்தில் இருக்கிறோம். பாஜக-வை பொறுத்தவரை மாவட்ட தலைவர்களுக்கான தேர்தலை முடித்து விட்டோம். 2026ல் கூட்டணி குறித்து அந்த நேரத்தில் கூறுகிறேன். கட்சி தலைமை அண்ணாமலை ஏற்றுக்கொள்வார் என்பது பிரச்சனை இல்லை. என்னுடைய வேலையை தொண்டனாகவும் செய்வேன். தலைவர் பதவியில் இருந்தால்தான் செய்வேன் என்ற அவசியம் கிடையாது. தமிழ்நாடு மக்களின் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்.
எனக்கென்று தனிப்பட்ட கருத்துகள் இல்லை. கட்சிக்காதான் இருக்கிறோம். எங்களுடைய ஆலோசனைகளை பாஜக மூத்த தலைவர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள். மக்கள் இரண்டு காரியத்தை பார்ப்பார்கள். ஒன்று நாங்கள் மீனர்களுக்கான போராட்டத்தில் இருக்கிறோம். போராட்டம் செய்கிறோம், டாஸ்மாக் ஊழலை பற்றி பேசுகிறோம், கைதாகிறோம் வீதிவீதியாக செல்கிறோம், இது ஒரு அரசியல். கட்சி ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகளில் மூன்று முறை வெளியே வருவது ஒரு அரசியல்.
அந்த அரசியலையும் மக்கள் பார்ப்பார்கள். கட்சி ஆரம்பித்து எத்தனை முறை வெளியே வந்தீங்க, எத்தனை முறை ஏசி காரை தாண்டி வெளியே வந்தீங்க, எத்தனை முறை மண்டபத்தில் மீட்டிங் போட்டீங்க, விஜய் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் களத்தில் மக்கள் யாருக்கு யார் எதிரி என்று முடிவு செய்கிறார்கள். நாங்கள் எங்களுடைய வேலையை மக்கள் முன்பு வைத்திருக்கிறோம். மக்கள் முடிவு செய்யட்டும் யாருக்கு யார் எதிரி என்று. திமுக-வின் தவறுகளை சுட்டிக்காட்டி போராடுவதில் பாஜக முதன்மையானதாக இருக்கிறது.
அரசியல் என்பது வெறும் மைக்கில் பேசிவிட்டு கை காட்டிவிட்டு போவது கிடையாது. களத்தில் நின்று வேலை பார்ப்பதுதான் அரசியல். பிரதமரை விஜய் விமர்சிக்க காரணம், அரசியலில் சக்தி வாய்ந்தவர்களை பற்றி பேசினால்தான் ஒரு மைலேஜ் கிடைக்கும். ராகுல் காந்தி குறித்து விஜய் பேச முடியுமா? மீடியா வெளிச்சத்திற்காகத்தான் விஜய் பிரதமரை பற்றி பேசுகிறார். அவர் ஆதாரத்தின் அடிப்படையில் பேசினால் நான் பதில் தருகிறேன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான். மீடியா நிறுவனம் தனிபட்ட நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆதிக்கத்தில் இருக்கிறதென்றால், ரெட் ஜெயண்ட் மூவிஸூக்கு தேங்காய் உடைத்து பூஜை போட்டது யார்? அவர்கள் எங்களைப் பற்றி பேசுகிறார். தமிழ்நாட்டில் மக்கள் மன்றத்தில் ஊழலை உடைத்துப்பேசும் கட்சி பாஜக”
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.