"39 தொகுதிகளில் அனைத்து கட்சிகளிலும் 99.9% சாதிகளின் அடிப்படையில்தான் வேட்பாளர் தேர்வு நடந்துள்ளது" - அண்ணாமலை பேச்சு!
39 தொகுதிகளில் அனைத்து கட்சிகளிலும் 99.9% சாதிகளின் அடிப்படையில்தான் வேட்பாளர் தேர்வு நடந்துள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் " அரசியிலில் வல்லுநர்கள்" என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் சாணக்கியா யூடூப் சேனலின் செயல் அலுவலர் ரங்கராஜ் பாண்டே, உயிரியல் தொழில்நுட்ப வல்லுநர் முரளி, கிராண்ட்மாஸ்டர் ஆர்.பி. ரமேஷ், வெளியீட்டாளர் பத்ரி ஷேஷாத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,
"கோவையின் வேட்பாளராக வரவில்லை பாஜகவின் மாநில தலைவராக வந்திருக்கிறேன். அண்ணாமலை என்ற பெயரைப் போட்டவுடன் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தரவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள். Professional in politics என்பது காலத்தின் கட்டாயம். நம் வாழக்கூடிய உலகம் அவ்வளவு எளிதான உலகம் கிடையாது.
அரசியலும், அரசும் சிக்கலாக ஆகிவிட்டது. 2024-ல் மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என நானும் பொது மக்களில் ஒருவராக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் தங்களை ப்ரொபஸ்னலாக மாற்றி கொள்ள ஆரம்பித்து விட்டது.
39 தொகுதிகளிலும் 99.9 சதவீதம் அங்குள்ள சாதிகளின் அடிப்படையில் தான் வேட்பாளர்கள் போடப்பட்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. இத்தனை நாட்கள் யாரெல்லாம் ஒதுங்கி இருந்தார்களோ அவர்கள் எல்லாரும் உள்ளே வர ஆரம்பிப்பார்கள்."
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.