“இயக்கம் ஒன்றுபட செயல்பட்டவன் நான்... என்னை சோதிக்காதீர்கள்” - செங்கோட்டையன் வேண்டுகோள்!
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கரட்டடிப்பாளையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்ட மேடையில், ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரின் புகைப்படம் ஒரே அளவில் இடம் பெற்றிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,
“மக்களே நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை. இந்த நிகழ்ச்சியில் எல்லோரும் கலந்து கொண்டுள்ளார்கள். தடுக்கி விழுந்தால் தமிழகத்தில் யார் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். 14 முறை புரட்சி தலைவருடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.
எதிர்கட்சி தலைவரின் கட்டளையிலே இந்த கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. நான் செல்லுகின்ற பாதை எம்ஜிஆர், ஜெயலலிதா பாதை. அந்த தெய்வம் காட்டிய வழியில்தான் நான் பயணித்து கொண்டிருக்கிறேன்.
செய்தியாளர்கள் காலை வீட்டில் கேட்டார்கள். என்ன சொல்ல போகின்றீர்கள் என்றார்கள். அப்போது சொன்னதுதான் இப்போதும் சொல்கின்றேன். ஒன்றும் இல்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. எத்தனை ஆண்டுகள் எத்தனை தலைவர்களுடன் பயணித்தவன். செய்தியாளர்களுக்கு எதுவும் கிடைக்காது. கவலைப்பட தேவையில்லை. புரட்சி தலைவர், புரட்சி தலைவி வழியில் செல்கின்றேன். அவர்கள் இருவரும் எனது வழிகாட்டிகள்.
விழாவில் எம்ஜிஆர் படம், ஜெயலலிதா படம் இல்லை என்றுதான் சொன்னேன். இவ்வளவுதான். கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, புறக்கணிக்கவில்லை. படம் இல்லாததால் கலந்து கொள்ளவில்லை. பல்வேறு ஜாலங்களை செய்து காட்டியவர்கள் அந்த தலைவர்கள்.
விழா குழுவில் இருந்து 5 பேர் வந்தார்கள். அவர்களிடம் சொன்னேன். நேர்மையான பாதையில் தன்னலம் கருதாது செயல்படுபவன் நான். எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும், இயக்கம் ஒன்றுபட வேண்டும் என செயல்பட்டவன் நான். என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள். செங்கோட்டையன் எவ்வளவு காலமாக கட்சியில் இருப்பவன். நான் தெளிவாக இருக்கின்றேன்.
போலீஸ் பாதுகாப்பு அவர்கள் போட்டு இருக்கின்றனர். பாதுகாப்பு கண்காணிப்பு என்பது காவல் துறை போட்டது. நான் போட சொல்லவில்லை. கோட்டைக்கு வர வேண்டும் என்றால் செங்கோட்டையனை சுற்றி வருகின்றார்கள். ஜெயலலிதாவின் பணிகளை கண்கூடாக பார்த்தவன். அவர் விரல் அசைவில் பணி செய்தவன் நான். எந்த பணியை கொடுத்தாலும் செய்து முடிப்பவன் செங்கோட்டையன் என்பது ஜெயயலிதாவுக்கு தெரியும்.
நான் நல்ல தொண்டனாக இருக்க ஆசைப்படுகிறேன். எப்போதும் தலைவன் என்று சொன்னதில்லை. நான் சொல்வது உங்களுக்கு புரியும். மீண்டும் தமிழ்நாட்டில் தொண்டனுக்கு தொண்டனாக பணியாற்றுவேன். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கின்றேன். மாற்று முகாமில் இருந்து கருத்து சொல்பவர்களை பற்றி கவலை இல்லை. விட்டுக்கொடுப்பவர்கள் நாம். 43 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் தவறான ஒரு வார்த்தையை கூட பயன்படுத்தியதில்லை. இதுதான் என் வாழ்க்கை வரலாறு” எனப் பேசினார்.
இந்த உரையில் 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை ஒரு முறை கூட பயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தார்.