திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி, இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 22ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. அன்றைய தினம் முதல் பக்தர்கள் பலர் விரதம் இருக்க தொடங்கினர்.
கந்தசஷ்டி விழாவை ஒட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. அந்த வகையில், மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது.
சூரசம்ஹாரத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையொட்டி திருச்செந்தூரில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப்பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.