அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதில் எனது பங்களிப்பும் உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரத்தில் ரூ4 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் முழுதிருவுருவ சிலை மற்றும் அரங்கத்தினை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் முத்துசாமி, எவ வேலு, சாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அவர் பேசியது, “மாவீரன் பொல்லான் அவர்களின் திருவுருவசிலை மற்றும் அரங்கத்தை திறந்து வைத்ததில் நான் பெருமை அடைகிறேன். மருதுபாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், பொல்லான் போன்றவர்கள் நம்முடைய வரலாற்றை நினைவுபடுத்துபவர்கள். 2019ம் ஆண்டு ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை விடுத்த நிலையில் எம்எல்ஏ ஈஸ்வரன் முயற்சியாலும் அமைச்சர்களின் முயற்சியாலும் இங்கு பொல்லான் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் இந்து நாளிதழில் வெளியான செய்தி ஒன்றில், அருந்ததியினரின் உள்இடஒதுக்கீடு எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக உள்ளது என ஆதாரபூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கலைஞர் அவர்கள் இந்த உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்தார். ஆனால் உடல்நலக்குறைவால் அவரால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் என்னை மருத்துவமனைக்கு அழைத்து உள் இடஒதுக்கீட்டை என்னை அமல்படுத்த கூறினார். இதில் என பங்களிப்பும் உள்ளது என்பது பெருமிதமாக உள்ளது.
திமுக அரசு எந்த சட்டத்தை நிறைவேற்ற எண்ணினாலும் அதை முழுவதுமாக ஆராய்ந்து வெற்றியை இலக்காக கொண்டு செயல்படும். திமுக கொள்கைக்கு கிடைத்திருக்கும் வெற்றி இது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு அமைய உள்ள 2.o அரசுக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும்” என்றார்.