பெண் ஆசிரியருக்கு கணவன் வரதட்சணை கொடுமை - காவலர் பூபாலன் கைது!
மதுரையில் இளம்பெண், வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் இளம்பெண், வரதட்சணை புகாரின் அடிப்படையில், இளம்பெண்ணின் கணவரான அப்பன்திருப்பதி காவலராக பணியாற்றும் பூபாலன், மற்றும் சாத்தூரில் ஆய்வாளராக உள்ள மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது 5பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவர்கள் நால்வரும் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இவர்களைத் தேடி வந்த நிலையில் காவலர் பூபாலன் இன்று காலை கைது செய்யப்பட்டு மாவட்ட கூடுதல் மகளிர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
காவலர் பூபாலனுக்கு வருகின்ற 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட கூடுதல் மகளிர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாக்கியவதி உத்தரவிட்டதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் சிறையிலடைக்க அழைத்து சென்றனர்.
வரதட்சணை கொடுமை புகாரால் கைது செய்யப்பட்டுள்ள காவலர் பூபாலன் மற்றும் அவரது தந்தை காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.