மனைவியை கொன்றதாக கணவருக்கு சிறை... 3 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் வந்த மனைவி... சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்!
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குஷால்நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவரது மனைவி மல்லிகே. இவர் கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனார். இதனையடுத்து, சுரேஷ் தனது மனைவியை காணவில்லை எனவும் அவரை கண்டுப்பிடித்து தருமாறும் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, பெட்டதரபுராவில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக்கூடு மல்லிகேவுக்கு சொந்தமானது என்றும், சுரேஷ் அவரைக் கொலை செய்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து பின்னர் சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்தார்.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 1ம் தேதி, மல்லிகேவை சுரேஷின் நண்பர் ஒருவர் பார்த்தார். இந்த சம்பவம், ஐந்தாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுச்செல்லப்பட்டது. காவல்துறையினரின் தவறை உணர்ந்த நீதிமன்றம், ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் வழக்கு குறித்த முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.
சுரேஷின் வழக்கறிஞர் பாண்டு பூஜாரி செய்தியாளர்களிடம் பேசியதாவது,
"குஷால்நகரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், தனது மனைவி காணாமல் போனது குறித்து 2020 ஆம் ஆண்டு குஷால்நகர் கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே நேரத்தில், பெட்டதரபுரா காவல் நிலைய எல்லைக்குள் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. பின்னர் ஒரு வருடம் கழித்து, திருமணம் தாண்டிய உறவு காரணமாக தனது மனைவியைக் கொன்றதாகக் கூறி, சுரேஷை போலீசார் கைது செய்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
டிஎன்ஏ அறிக்கை வருவதற்கு முன்பே, போலீசார் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டின் டிஎன்ஏ மல்லிகேவின் தாயின் ரத்த மாதிரியுடம் பொருந்தவில்லை என்பதைக் காட்டியது. டிஎன்ஏ பொருத்தமின்மையைக் காரணம் காட்டி ஜாமின் மனு தாக்கல் செய்தபோது, நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து, மல்லிகேவின் தாய் மற்றும் கிராமவாசிகள் உள்பட சாட்சி விசாரணையைக் கோரியது.
அவள் உயிருடன் இருப்பதாகவும், யாரோ ஒருவருடன் சென்றுவிட்டதாகவும் அனைவரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குற்றப்பத்திரிகையில் உள்ளவைகள் குறித்து குஷால்நகர் மற்றும் பெட்டதரபுரா போலீசாரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆனால் அவர்கள் தங்கள் விசாரணையை ஆதரித்து, எலும்புக்கூடு மல்லிகேயுடையது என்றும், சுரேஷ் அவரைக் கொலை செய்தாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, மடிகேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் மல்லிகே ஒரு ஆணுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட சாட்சியான சுரேஷின் நண்பர் மல்லிகேவை பார்த்தார். உடனடியாக மல்லிகே மடிக்கேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த வழக்கை தீவிரமாகக் கையாண்ட நீதிமன்றம்,மல்லிகேவை உடனடியாக ஆஜர்படுத்துமாறு போலீசாரிடம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மல்லிகேவை விசாரித்தபோது, அவர் வேறொருவரை மணந்ததை ஒப்புக்கொண்டார். சுரேஷுக்கு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்று அவர் கூறினாள். மடிகேரியிலிருந்து 25-30 கி.மீ தொலைவில் உள்ள ஷெட்டிஹள்ளி என்ற கிராமத்தில் அவர் வசித்து வந்தார். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க போலீசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்காகக் காத்திருக்கிறோர். அது வெளியிடப்பட்டதும், காவல்துறையினருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வேன். சுரேசுக்கு நீதி மற்றும் இழப்பீடு கோருவேன். சுரேஷ் எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த ஏழை என்பதால், நாங்கள் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் எஸ்டி ஆணையத்தையும் அணுகுவோம். மேலும், கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். சுரேஷை குற்றவாளியாக குறிப்பிட்டு இரண்டு வழக்குகளையும் முடிக்க காவல்துறையினரால் சதி நடந்ததா?
இவ்வாறு வழக்கறிஞர் பாண்டு பூஜாரி தெரிவித்தார்.