"ஆணவக் கொலை சமூகத்தின் புற்றுநோய்!" - மதுரையில் அண்ணாமலை பேட்டி!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். அப்போது, ஆணவக் கொலைகள், மத்திய அரசின் புதிய சட்டம், கூட்டணி அரசியல் மற்றும் பூத் கமிட்டி கூட்டம் உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்தார்.
ஆணவக் கொலைகள் குறித்துப் பேசிய அண்ணாமலை, "கடந்த 200-300 ஆண்டுகளாக ஆணவப் படுகொலை நடந்து வருகிறது. இது சமூகத்தில் ஏற்பட்ட புற்றுநோய். இதனை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும்," என்று தெரிவித்தார். சமூகத்தில் இத்தகைய கொடூரமான குற்றங்களை வேரறுக்க தனிப்பட்ட மற்றும் கூட்டு முயற்சியின் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் குறித்துப் பேசிய அண்ணாமலை, "அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி, அரசு அலுவலர்கள் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டால் பதவி பறிபோகும் நிலை இருந்தது. இதை அமைச்சர்கள் மற்றும் பிரதமர் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதால், அரசியலமைப்பில் ஒரு புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறோம்.
ஆம் ஆத்மி கட்சி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கோப்புகளைப் பார்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இது போன்ற சங்கடங்கள் வரக்கூடாது என்பதற்காக, பிரதமர் உட்பட அனைவரையும் பதவி நீக்கம் செய்ய இந்த சட்டத்தைக் கொண்டு வந்தோம். இது பாஜகவிற்கு மட்டுமல்ல, அனைத்து கட்சிக்குமே பொருந்தும் வகையில் தான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், நமது முதல்வர் கூட எதிர்க்கிறார். இது சட்டத்தை அவமதிக்கும் செயல்," என்று விளக்கமளித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது கூட்டம் இல்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது பூத் கமிட்டி கூட்டம். அது மாநாடு அல்லது பொதுக்கூட்டம் அல்ல. பூத் கமிட்டியில் அந்தந்த பகுதி நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள். ஒரு சில வயதானவர்கள் வந்ததாக தொலைக்காட்சியில் காண்பித்தீர்கள். அது விதிவிலக்காக இருந்ததைச் சுட்டிக் காட்டி உள்ளீர்கள். பூத் கமிட்டி கூட்டம் என்பதால் அந்தந்த பகுதி நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள்," என்று தெளிவுபடுத்தினார்.
அதிமுக கூட்டணியில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவதை அண்ணாமலை ஏற்றுக் கொள்கிறார் என அதிமுகவினர் கூறுவது குறித்த கேள்விக்கு, "நான் பாஜகவில் ஒரு தொண்டன். கட்சி என்ன சொல்கிறதோ அதைத்தான் நான் செய்ய முடியும். தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்புகளைச் சொல்ல முடியாது. உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக கூட்டணி உறுதியாகி, எடப்பாடி முதல்வர் என்பதை உறுதி செய்த பின்பு, கட்சிக்கு கட்டுப்பட்டுத்தான் நான் செயல்பட முடியும்," என்றார்.
மேலும், "அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அதே போல் பாஜக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும். 68,000 பூத்கள் உள்ளன. பூத்துக்கு 12 பேர் என்ற கணக்கில் லட்சக்கணக்கான நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.