"செயல்படுத்தப்படாத திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும்?" - அண்ணாமலை கேள்வி!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "தேசிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக அச்சுறுத்த துவங்கியதுடன், தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளனர்.
இது உரிமைக்காக போராடும் நமது மாணவர்களுக்கான தண்டனையே தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்திய வரலாற்றில், எந்த மத்திய அரசும், அரசியல் பழிவாங்கலுக்காக கல்வி வாய்ப்பை நெரிக்கும் அளவுக்கு இருந்தது இல்லை. தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீது அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பாஜக தன்னை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"தமிழ்நாடு தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் (தமிழ்) கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழகக் குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்துள்ளனர்.
TN has lost its sheen and is at the bottom of the table in numeracy and basic language proficiency (Tamil). Thiru @mkstalin and his coterie should be ashamed of bringing down the quality of education, politicising Education, and depriving the Children of Tamil Nadu of equal… https://t.co/Nymrnof7ZC
— K.Annamalai (@annamalai_k) February 9, 2025
இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே PMSHRI உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை நிறைவேற்றினீர்களா இல்லையா? செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி, 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுவதாக பொய்யைப் பரப்பாதீர்கள்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.