பாலியல் வழக்கு | FIR லீக் ஆனது எப்படி? சென்னை காவல் ஆணையர் விளக்கம்!
பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் எவ்வாறு லீக் ஆனது என்பது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, இது தொடர் எஃப்ஐஆர் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். எஃப்.ஐ.ஆர் எப்படி லீக் ஆனது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
“பாதிக்கப்பட்ட மாணவி எப்படி புகார் அளித்தாரோ அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. சந்தேகத்திற்கிடமான நபர்களை முதலிலேயே கண்டறிந்து குற்றவாளியை கைது செய்தோம். இதுவரை நடந்த விசாரணையில் இவர் மட்டும் தான் குற்றவாளி. எப்ஐஆர் வெளியானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக எப்ஐஆர் லாக் ஆவதில் தாமதம் ஆகியுள்ளது. எப்ஐஆர் லாக் ஆவதில் தாமதம் ஏற்பட்டதால் அதனை பதிவிறக்கம் செய்திருப்பார்கள். இதுவரை ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. ஞானசேகரன் மீது 2019க்கு பின் எந்த வழக்கும் பதிவாகவில்லை.
இதுவரை வேறு பெண்களிடம் இருந்து புகார்கள் எதுவும் பெறப்படவில்லை. வேறு யாரேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி உள்ளது. அதில் 56 சிசிடிவி வேலை செய்கிறது. பெண் புகார் கொடுத்த அடுத்த நாளே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை நடுநிலையுடன், கட்சி வேறுபாடு கடந்து நடந்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். போராட்டம் நடத்துவதற்கென சில இடங்கள் உள்ளது. அதை மீறி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவர். அதன் அடிப்படையில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேலும் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்துவது என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையை நம்பி மாணவி புகார் அளித்தார். அவர் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும்"
இவ்வாறு சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.