ஓசூர்: இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த 3 இளைஞர்கள் கைது!
ஓசூர் தேசிய நெடுங்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகையின் போது திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர், பட்டாசு வெடித்துக் கொண்டே அதிகவேகத்தில் சென்று வீலீங் செய்தனர். இந்த வீடியோ சமூக வலையதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து வீலீங் செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இது போன்று போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீலீங் செய்யும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்னர். அதன்பேரில் காவல்துறையினர் வீலீங் செய்யும் இளைஞர்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் டிஎஸ்பி பாபுபிரசாத் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்: உத்தரகாண்ட் சுரங்க விபத்து | அயராது பாடுபட்ட மீட்பு குழுவினருக்கு குவிந்து வரும் பாராட்டு…
அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வீலீங் செய்த 6 இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முகமது அப்ரார் (22), அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் (23), அட்கோ பகுதியை சேர்ந்த சையதுமுகமதுஅலி (19) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. வீலிங் செய்தவர்களில் மற்ற 3 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த சிறுவர்களும் 25 வயது ஆகும் வரை ஓடுநர் உரிமம் பெற தடை செய்யப்பட்டது. பின்னர் 6 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஓசூர் டிஎஸ்பி கூறும் போது, "சாலைகளில் வீலீங் செய்யும் இளைஞர்களின் வீடியோக்களை, பொதுமக்கள் 638329123 என்ற வாட்சாப் எண்ணுக்கு அனுப்பினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்பவர்களின் விவரம் பாதுகாக்கப்படும். இனி ஓசூர் பகுதில் வீலீங் செய்பவர்கள் மீது கடுமையான நடடிக்கை எடுக்கக்கப்படும்" என எச்சரித்தார்.