For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் அரசியல் கூட்டணிகளின் வரலாறு..!!

12:50 PM Feb 09, 2024 IST | Web Editor
இந்தியாவில் அரசியல் கூட்டணிகளின் வரலாறு
Advertisement

கூட்டணி கட்சிகள் இரு பிளவுகளாக பிரிந்து 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வரும் வேளையில் இந்திய அரசியலில் கூட்டணிகளின் வரலாறு குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.

Advertisement

10 ஆண்டுகால ஆட்சியின் குறைகளை தேர்தல் வியூகங்களில் வெளிச்சம் போட்டு காட்டி நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் 2014ல் ஆட்சிக்கு வந்தது. மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியின் குறைகள், வாக்குறுதிகள், அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் என பல துருப்புச் சீட்டுகளை கையில் வைத்து 2024ம் ஆண்டு தேர்தலில் ஒரணியில் ஒருங்கிணைந்துள்ளன எதிர்கட்சிகள். ஆளுக்கொரு பெயரை இரு கூட்டணிகளும் வைத்துக் கொண்டன. இவற்றைப் போலவே இந்தியாவில் இதற்கு முன்பு உருவான கூட்டணிகளின் வரலாறுகளை விரிவாக தெரிந்து கொள்வோம்.

கூட்டணி ஆட்சி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது..?

இந்தியா மட்டுமல்ல உலக அரசியலில் கூட்டணி கட்சி என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இங்கிலாந்து கன்சர்வேடிவ் கட்சியின் கூட்டனி ஆட்சி தொடங்கி பலநாடுகளில் கூட்டணி கட்சிகளின் ஆட்சிதான் நடைபெற்று வருகின்றன. கூட்டணி கட்சி என்பது அதிகாரப் பரவலை ஏற்படுத்தும் , அனைவருக்கும் இடமளிக்கும், குறிப்பாக அதிகாரக் குவியலை தடுத்து சர்வாதிகார போக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்கும். மிருக பலத்துடன் ஆட்சியமைத்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை உலக நாடுகளும் குறிப்பாக இந்தியாவும் கண்டே இருக்கிறது.

கூட்டணி கட்சிகளுக்கு பல்வேறு அரசியல் பின்புலம், செயல் திட்டம், கொள்கை இருந்தாலும் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் மத சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், மொழிச் சிறுபான்மையினர், இனச் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடி ஆதிவாசி மக்களின் குரலும் , தேவையும் செவிமடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

சுதந்திரத்திற்கு முந்தைய கூட்டணி ஆட்சி :

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராடி இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. கிளமெண்ட் அட்லியின் புதிய அரசு சுதந்திரத்திற்கு முன்பு ஒரு மாதிரி இடைக்கால அரசை நிறுவுமாறு 1946ம் ஆண்டு இந்தியாவிற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியது. அதன்படி இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும், முஸ்லீம் லீக்கும் இடைக்கால அரசை உருவாக்க முன்வந்தனர்.

1946ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி இந்த இடைக்கால அரசு உருவானது. இந்த தற்காலிக அரசிற்கு ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார். இவருக்கு அடுத்தபடியாக மிகவும் சக்திவாய்ந்த துறையான உள்துறை சர்தார் வல்லபாய் படேலுக்கு வழங்கப்பட்டது. இந்த இடைக்கால அரசில் முஸ்லீம் லீக்கின் மிக முக்கியமான தலைவரான லியாகத் அலிகான் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அதேபோல முஸ்லீம் லீக் சார்பில் சட்டத்துறை அமைச்சராக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஜோகேந்திர மண்டல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுதந்திர இந்திய அரசு : முதல் அமைச்சரவை

1947 ஆகஸ்டு 15ம் நாள் இந்தியா சுதந்திரம் பெரும் வரை இடைக்கால அரசு நீடித்தது. ஆகஸ்டு 14ம் நாள் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று முகமது அலி ஜின்னா தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்தியாவில் ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திரம் பெற்று ஜவஹர்லால் நேரு தலைமையிலான ஆட்சி அமைந்தது. நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரானார்.

நேருவின் முதல் அமைச்சரவையில் நேரு பிரதமராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார். துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சரகாவும் படேல் மற்றும் கல்வி அமைச்சராக மௌலானா அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இதில் காங்கிரஸ் அல்லாத இந்திய குடியரசு கட்சியின் சார்பில் சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கர் , சீக்கியர்களை மையமாக கொண்டு இயங்கிய பாந்திக் கட்சியின் பல்தேவ் சிங் பாதுகாப்பு அமைச்சராகவும், இந்து மகா சபையின் சியாம் பிரசாத் முகர்ஜி தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து 1952ம் ஆண்டு நேரு தலைமையிலான இரண்டாவது அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் பெரும்பான்மையாக இருந்ததால் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் மட்டுமே அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலை 1962 வரை தொடர்ந்தது. 1964ம் ஆண்டு மே 27ம் தேதி நேருவின் மரணம் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர் அடுத்த பிரதமர் யார் என்று கேள்வி எழ கிங் மேக்கராக தேசிய அரசியலில் தனக்கென தனி இடம்பிடித்த காமராஜர் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக பரிந்துரை செய்தார். அதற்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமர் ஆனார். அவரும் இரண்டு வருடங்களில் மரணித்து விடவே காமராஜரின் பரிந்துரைப்படி இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமராகவும், முதல் பெண் பிரதமராகவும் பொறுப்பேற்றார்.

கூட்டணி கணக்குகள் தொடக்கம் :

1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டிருந்தது. காமராஜர் தலைமையில் ஓரணியாகவும், இந்திரா காந்தி தலைமையில் மற்றொரு அணியாகவும் காங்கிரஸ் செயல்பட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என தேர்தல் அரசியலுக்கு வந்த திமுக தனது இலக்கை 1967ல் எட்டி அண்ணா தலைமையில் ஆட்சியை பிடித்தது. சில வருடங்களிலேயே அண்ணா மறைந்ததால் அதன் பிறகு கருணாநிதி முதலமைச்சரானார்.

1971 தேர்தலில் பிளவுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திரா காந்தி தமிழ்நாட்டில் திமுகவுடன் தனது முதல் கூட்டணியை வைத்தார். அப்போது காங்கிரஸ் சட்டப் பேரவைக்கு போட்டியிடாமல் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே போட்டியிட்டது.  24 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 23 இடங்களில் வெற்றி வாகை சூடியது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.

இந்தியா  முழுக்க இந்திரா காங்கிரஸ் 221 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு இன்னும் 41 இடங்கள் தேவை என்ற நிலை இருந்தது. இடதுசாரிகள் மற்றும் திமுக இந்திரா காங்கிரஸை வெளியில் இருந்து ஆதரித்ததால் 289 இடங்களுடன் இந்திரா காந்தி பிரதமரானார்.

காமராஜர் தலைமையிலான காங்கிரஸ்,  சுதந்திர காங்கிரஸ், பிரஜா சோசலிஸ்ட் கட்சி, சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஜன சங் ஆகிய கட்சிகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியைத் தழுவியது.

எமர்ஜன்சியை எதிர்த்து உருவான கூட்டணி : 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய அரசியலமைப்பின் விதி 352ஐ பயன்படுத்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தினார். ஏறத்தாழ 2ஆண்டுகள் நீடித்த எமர்ஜன்சியின் போது அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசை கேள்வி எழுப்பும் அனைவரும் நசுக்கப்பட்டனர். ஊடகங்கள தணிக்கைக்கு பின்னே தங்களது செய்திகளை பிரசுரித்தன. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

எமர்ஜன்சியின் போது பல மாநிலங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஆனால் அவை ஒன்றிணையவில்லை. பிரிந்து கிடந்த அணிகளால் எமர்ஜன்சியை அகற்ற முடியவில்லை. பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான ஜெயப்பிரகாஷ் நாராயணன் எனும் ஜெ.பி அவற்றை ஒருங்கிணைத்தார். ஜெ.பி அடிப்படையில் ஒரு சுதந்திர போராட்ட வீரர்.

சுதந்திரத்திற்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெ.பி. 1970க்கு பின் மீண்டும் அரசியல் களம் புகுந்து  எமர்ஜன்சிக்கு எதிராக அணி திரட்டினார். அதில் வெற்றியும் கண்டார். காங்கிரஸ் , இடதுசாரிகள் அல்லாத அணியை எமர்ஜன்சியை அமல்படுத்திய இந்திரா காந்திக்கு எதிராக கட்டி எழுப்பினார். தமிழ்நாட்டில் திமுக ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்தது. ஜெ.பி.யின் முயற்சியால் எதிர்கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி உருவானது. இந்திரா காந்திக்கு எதிராக போராட்டங்கள் கிளர்த்தெழுந்தன. இந்திரா காந்தி வீழ்த்தப்பட்டார். ஜனதா சர்க்கார் எனும் புதிய கூட்டணி ஆட்சி உருவானது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

ஜனதா கட்சிக்கு எதிராக இந்திரா காந்தி இடதுசாரிகள் மற்றும் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவுடன் தேர்தலை எதிர்கொண்டு தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்று 14 இடங்களை பெற்றது. மத்தியில் பெரும் தோல்வியைத் தழுவியது.

1980 பொதுத் தேர்தல் கூட்டணி :

எமர்ஜன்சிக்கு பிறகு ஆட்சியமைத்த ஜனதா அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் நீடித்தது அதன் பிறகு 1980 பொதுத் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் இந்திரா காந்தி தமிழ்நாட்டில் திமுக மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியோடு கூட்டணியில் இணைந்தார். ஜனதா கூட்டணி அதிமுக மற்றும் பஞ்சாபின் சிரோமணி அகாலிதலத்துடன் கூட்டணி வைத்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்த பெரும்பான்மையுடன் 353 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது. 1984ல் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 404 இடங்களை பிடித்து ராஜீவ் காந்தி பிரதமரானார்.


தேசிய முன்னணி ( 1989 – 1991 ) :

1989 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா கட்சிக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவானது. இது தேசிய முன்னணி என அழைக்கப்பட்டது. ஜனத தளம் மற்றும் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் என்.டி.ராமாராவ் இணைந்து இந்த கூட்டனியை உருவாக்கினர். இந்த அணிக்கு ஒருங்கிணைப்பாளராக வி.பி.சிங் செயல்பட்டார். காங்கிரஸ் கட்சி அதிமுக மற்றும் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் தேசிய முன்னணிக்கு வெளியிலிருந்து பாஜக மற்றும் இடதுசாரிகள் ஆதரித்தனர். ஜனதா தள அரசாங்கம் உருவானது. வி.பி.சிங் பிரதமரானார். இதன் பிறகு மண்டல் கமிஷன் பரிந்துரை, பாபரி மஸ்ஜித் பிரச்னை , ரத யாத்திரைக்கு எதிர்ப்பு போன்றவற்றினால் பாஜக தனது ஆதரவினை திரும்ப பெற்று ஆட்சியைக் கவிழ்த்தது. இதன் பிறகு 8வது பிரதமராக சந்திர சேகர் ஜனத தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் வெளியிலிருந்து  கொடுத்த ஆதரவுடன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1991ல் ஆட்சி கவிழ்ந்த பிறகு பிறகு ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஜனதா தளம் தேர்தலில் வென்று பி.வி.நரசிம்ம ராவ் பிரதமரானார்.

ஐக்கிய முன்னணி ( 1996-98)

1996ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய முன்னணி கூட்டணி , காங்கிரஸ் மற்றும் பாஜக மூன்று அணிகளாக தேர்தலை எதிர்கொண்டது. யாருக்கும் பெரும்பானமை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தது. பாஜக 161 இடங்களை பிடித்தது. அதிக இடங்களை பிடித்த பாஜகவை பதவியேற்று பெரும்பானமையை நிரூபிக்க குடியரசுத் தலைவர் அழைத்தார். 13 நாட்கள் பிரதமராக இருந்த வாஜ்பாய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திணறினார். இதனையடுத்து ஐக்கிய முன்னணியை வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரித்தது. ஐக்கிய முன்னணியின் தேவகவுடா பிரதமரானார். இதன் பிறகு ஒரு வருடம் கழித்து ஐக்கிய முன்னணியின் சார்பில் ஐ.கே.குஜ்ரால் பிரதமரானார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ( 1999-2004 ) :

13 நாட்களை தொடர்ந்து 13 மாதங்கள் வாஜ்பாய் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த கூட்டணியில் அதிமுக மற்றும் சிவ சேனா போன்ற கட்சிகள் இடம்பெற்றிருந்தன. 1998ல் தான் தேசிய ஜனநாயக கூட்டணி முதன்முதலில் உருவானது. 1999ல் தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவராக இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,  வாஜ்பாய் அரசுக்கு கொடுத்த ஆதரவினை திரும்ப பெற்று ஆட்சியை கவிழ்த்தார். இதனால் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆட்சிக் கவிழ்ப்பு  போன்ற பிரச்னைகளை கையிலெடுத்து காங்கிரஸுக்கு எதிராக பெரிய கூட்டணியை NDA கட்டி எழுப்பியது. இந்த கூட்டணியில் திமுக, மதிமுக , பாமக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, பிஜூ ஜனதா தளம், சிரோமனி அகாலி தளம், ஜனதா தளம், ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த கூட்டணி தேர்தலில் வெற்றியும் பெற்றது. 5 வருடம் முழுமையாக பாஜக ஆட்சியில் இருந்தது.  காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி – UPA (2004-2014 )

ஐந்து ஆண்டுகால பாஜக ஆட்சியை அகற்ற வேண்டி 2004 பொதுத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி புதிய கூட்டணியை உருவாக்கியது. அதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று பெயரும் வைத்தது. 2002 குஜராத் கலவரம், கார்கில் சவபெட்டி ஊழல் போன்றவை முக்கிய பிரச்னைகளாக பார்க்கப்பட்டன. காங்கிரஸ் தலைமையில் திமுக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் , சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இடதுசாரிகள் வெளியிலிருந்து காங்கிரஸை ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று 5ஆண்டுகள் ஆட்சி செய்து 2009 பொது தேர்தலை எதிர்கொண்டது. 2009 பொதுத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் கூட்டணிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அதிமுக, இடதுசாரிகள், மதிமுக, தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் மூன்றாவது அணியை முன்னெடுத்தன. 2004ல் NDA கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் 2009ல் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணி ( 2014 – 2023 )

காங்கிரஸ் மீதிருந்த 10ஆண்டுகால ஆட்சியின் அதிருப்தி , இலங்கைத் தமிழர் விவகாரம், 2ஜி ஊழல் போன்றவை முக்கிய பிரச்னைகளாக பாஜக பிரச்சாரத்தை முன்னெடுத்தது. குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. NDA கூட்டணியில் பாஜக, சிவசேனா, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. திமுக, அதிமுக எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. 2014 தேர்தலில் திமுக ஒரு சீட்டைக் கூட வெற்றிபெற முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து 2019 பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும், காங்கிரஸ் கூட்டணியில் திமுகவும் இடம்பிடித்தது. இறுதியில் பாஜக அறுதி பெரும்பான்மையான இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

I.N.D.I.A கூட்டணி ( 2023 )

பாஜக வின் பத்து ஆண்டுகால ஆட்சியின் மீதான அதிருப்தி, பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளை பாரபட்சமாக நடத்துவது,  விசாரணை ஏஜென்சிகள், அமலாக்கத்துறை மற்றும்  மத்திய அரசின் நிறுவனங்களை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவது போன்ற முக்கிய பிரச்னைகளை முன்வைத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் முதல் எதிர்கட்சிக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் முக்கிய எதிர்கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய  ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் , இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

இதன் பிறகு பெங்களூரில் இரண்டாவது எதிர்கட்சிக் கூட்டம் 2023 ஜூலை 18 மற்றும் 19ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தியா முழுக்க எதிர்பார்க்கப்பட்ட இந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் புதிய கூட்டணி உருவானது. இந்த கூட்டணிக்கு Indian National Developmental Inclusive Alliance என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணி உடனான தனது உறவை முறித்துக் கொண்டு வெளியேறி தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கைகோர்த்து பீகாரில் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். களம் மாறியுள்ளது, புதிய கூட்டணிகள் உருவாகியுள்ளன. எந்த கூட்டணி வெல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- ச.அகமது, நியூஸ்7 தமிழ்

Tags :
Advertisement