“விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளியில் இந்தி... அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இருமொழியா?” - அண்ணாமலை கேள்வி!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது,
“அரசு பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி இரண்டு மொழிகளில் படிக்க வேண்டும் என்கிறார்கள். இதனால் அரசு பள்ளியில் இருக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு செல்கிறார்கள். முன்பு பாஜகவில் இருந்த அரசகுமார் தற்போது திமுகவில் இருந்துகொண்டு தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அவர் ஒரு விழாவில் 68 லட்சம் பேர் தனியார் பள்ளியில் படிப்பதாக கூறினார். அதன் மார்க்கெட் ரூ.30,000 கோடி. அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிக்கு சென்று படிக்கத்தான் அரசு இருமொழிக் கொள்கையை வைத்திருக்கிறதா?
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் 2016 தேர்தல் வாக்குறுதியில் தமிழ் பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் கட்டாய மொழியாகவும், இந்தி உட்பட பிற மொழிகள் விருப்ப மொழியாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். அதேபோல்தான் மும்மொழிக்கொள்கையும்.
தவெக தலைவர் விஜய், சிபிஎஸ்சி பள்ளியை நடத்தி வருகிறார். அவர் தனது இடத்தை 35 ஆண்டுகள் ஒரு அறக்கட்டளைக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். அந்த அறக்கட்டளை அவரது அப்பா பெயரில் பதிவாகியுள்ளது. அவர் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளியில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் குழந்தை ஃபிரெஞ்ச் மொழியில் படிக்கிறார்.
சீமான், விஜய், அன்பில் மகேஸ் போன்ற அரசியல் தலைவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இரண்டு மொழியில் படிக்க வேண்டும் என எந்த அர்த்ததில் சொல்கிறார்கள்?. தமிழ்நாட்டில் எத்தனை பேர் மும்மொழி கொள்கையில் பயின்று வருகிறார்கள் என தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கைவிட வேண்டும். விஜய் மற்றும் சீமான் குடும்பத்தினருக்கு ஒரு நியாயம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நியாம் என்பதை எந்த காரணத்தைக்கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எதற்காக வீணாக ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். இந்தி வேண்டாம் என்றால் மூன்றாவது எதாவது ஒரு மொழியை படியுங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம் . புதிய தேசிய கல்வி கொள்கைபடி 5ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிதான் இருக்கும். 5 முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழில் இருப்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். மீதமுள்ள வகுப்புகளில் ஆங்கிலத்தில் கற்க வேண்டும். இதில் ஒரே ஒரு பாடம் மட்டும் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் இருக்கும். இந்தி மொழியை யாரும் திணிக்கவில்லை. அரசியல் தலைவர்கள் முதலில் கண்ணாடி பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா? மூன்றாது மொழி வேண்டாம் என்று கூறினால் பாதிப்படைவது நம் குழந்தைகள்தான்.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களைவிட அதிகமாக இருப்பதால், தமிழ்நாட்டில் இருமொழிகொள்கை தோற்றுவிட்டது என்பது நிரூபனமாகியுள்ளது. இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலமும் மும்மொழியை ஏற்றுள்ளது. கேரளாவில் தமிழில் பாடப்புத்தகம் வந்துவிட்டது. ஆட்சியில் இருப்பவர்களின் தனியார் பள்ளிகள் பெருக வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கொடுக்க மறுகிறார்கள். அதை தடுப்பதற்காக மூன்று மாதம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்திய பிறகு, அந்த தரவுகளோடு தமிழ்நாடு அரசுக்கு எதிராக குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் தரப்போகிறோம்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.