பாதுகாப்பு குறைபாட்டினால் நமது சகோதர, சகோதரிகளை இழந்து விட்டோமோ? - ஆர்.பி.உதயக்குமார்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு, பொட்டுலுப்பட்டி கிராம ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி மற்றும் பாக பொறுப்பாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கொண்டு வரவில்லை, மக்களின் வரிப்பணத்தோடு, இதுவரை நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஊதாரி தனமாக செலவு செய்து விளம்பர வெளிச்சத்தில் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த 53 மாத கால ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துள்ளது, நிதி மேலாண்மையில் தோல்வியடைந்த காரணத்தால் இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக சாதனை படைத்துள்ளது. தமிழக அரசின் நிதி நிலை பற்றியும், வாங்கிய கடன் தொகை எவ்வளவு செலவிடப்பட்டது என்ற விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்.
கருரில் நடைபெற்ற துயர சம்பவம் இனி தமிழகத்தில் எங்கும் நடைபெற கூடாது என்பது தான் எல்லோருடைய எண்ணமும் விருப்பமும். இப்போது இருக்கிற கவலை எல்லாம், ஆளும் கட்சி கூட்டங்களுக்கு ஒரு அணுகுமுறையும், எதிர்கட்சி கூட்டங்களுக்கு ஒரு அணுகுமுறையும் கடைபிடிப்பதால் இந்த 41 உயிர்கள் பரிபோனதோ? பாதுகாப்பு குறைபாட்டினால் நமது சகோதர சகோதரிகளை இழந்து விட்டோமோ? என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
உரிய விரிவான, நடுநிலையான, ஆளமான, உண்மையான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே முதல்வர் சமுக வலைதளங்களில் அவதூறு பரப்ப வேண்டாம் என சொல்கிறார். பாதுகாப்பு குறைபாடு கண்கூடாக தெரிகிறது, கை புண்ணிற்கு எதற்கு கண்ணாடி என்பதை போல, அந்த நிகழ்வில் காவல்துறையினர் எங்கு இருந்து பாதுகாப்பு பணி செய்தார்கள் என காட்சிகளை பார்க்கும் போதே வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
பாரபட்சமான அணுகுமுறையை இந்த அரசு கையாண்டதன் காரணமாக 41 உயிர்கள் பிரிந்தது. இந்தியாவிலேயே ஒரு பொதுக்கூட்டத்தில் நடத்தது இல்லை, அது ஒரு கருப்பு நாளாக அந்த நாள் அமைத்திருக்கிறது. இந்த அரசின் பாராபட்சமான அணுகுமுறை காரணமாக இருக்குமோ என்ற கவலை எழுந்திருக்கிறது. இதற்கு விரிவான சிபிஐ விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார், அதை நாங்களும் வலியுறுத்துகிறோம்.
உரிய விசாரணை நடத்தி விசாரணை அறிக்கை வந்த பின் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சொன்னார்கள், இப்போது தவெக நிர்வாகிகள் கைது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம், எந்த ஒரு தலைவரும், தன்னுடைய, தொண்டர்கள், தன் பேச்சை கேட்க வருகிற தொண்டர்கள், தன் முகத்தை பார்க்க வரும் தொண்டர்கள் இறந்து போக வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள், அப்படி நினைப்பவர்கள் தலைவராகவே இருக்க மாட்டார்கள்.
தன்னை பார்க்க வருகை தந்த தொண்டர்கள் இறந்து போக வேண்டும் என ஒரு தலைவர் நினைப்பதாக நாம் சித்தரிக்க முயல்வது என்பது அரசியல் அடிப்படை தத்துவத்தை கேள்விக்குறி ஆக்குவதாக இருக்கிறது. நிச்சயமாக சிபிஐ விசாரணை வரவேண்டும் அதன் மூலம் ஒரு படிப்பினை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.