ஹேஷ்டேக் போர் - நடுவில் புகுந்து திடீரென மாஸ் காட்டும் தவெக!
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக திமுக, பாஜக இடையே வார்த்தை போர் முற்றிய நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று காலை முதல் Get Out Stalin என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யப்போவதாகவும், யாருடைய ஹேஷ்டேக் அதிகம் பகிரப்படுகிறது என பார்ப்போம் என்றும் சவால் விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை முதலே திமுகவினர் பகிர்ந்த #GetOutModi ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு #GetOutStalin ஹேஷ்டேகை தொடங்கி வைத்தார். இரு கட்சியினரும் ஹேஷ்டேகுகளை வேகமாக பகிர்ந்து வந்த நிலையில் காலை முதலே இரண்டு ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வந்தன.
இதில் பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்ட #GetOutStalin டேக் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், நடிகர் விஜய்யின் தவெக தொண்டர்கள் #TVKForTN எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர். தற்போது இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாவது டிரெண்டிங்கில் உள்ளது. தொடர்ந்து ஹேஷ்டேக் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதன்மூலம் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பாஜகவின் #GetOutStalin டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.