Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் : பாஜக, காங்கிரஸ் - யாருக்கு படிப்பினை?

05:46 PM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

மக்கள் மனதில் உள்ள கணிப்பை நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளால் சொல்லிவிட முடியாது என்பதை, எடுத்துக் காட்டும் வகையில் ஜம்மு - காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இரண்டு மாநிலங்களிலும் தலா 90 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு 46 இடங்களில் வெல்ல வேண்டும். பத்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு பிறகு ஹரியானாவிலும், தேர்தல் நடைபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரிலும் சட்டப்பேரவைக்கான தேர்தல்… என பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால், மாறுபட்ட முடிவை மக்கள் அளித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணியும் ஹரியானாவில் பாஜகவும் ஆட்சி அமைக்கின்றன.

Advertisement

காங்கிரஸ் கட்சிக்கு பாடமா?

இந்த தேர்தல் முடிவுகள் பலவற்றை கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். குறிப்பாக, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற தேர்தல் என்பதால், மத்திய அரசின் முடிவிற்கான மக்கள் வாக்கெடுப்பாகவும் இந்த தேர்தல் பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

கை கொடுக்காத காஷ்மீர்

தேசிய அளவில் I.N.D.I.A கூட்டணியில் இருந்தாலும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் காஷ்மீரில் தனித்து களமிறங்கின. பாஜக தனித்து களமிறங்கினாலும், சுயேச்சைகள் சிலருக்கு மறைமுக ஆதரவளித்தது என்று கூறப்படுகிறது. முடிவில், தேசிய மாநாட்டுக் கட்சி 42, பாஜக. 29, காங்கிரஸ் 6, மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இவை மட்டுமின்றி, ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு இடத்தில், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வென்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இங்கு 38 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஹரியானாவில் சிதறிய வாக்குகள்

காஷ்மீரில் மட்டுமல்ல, ஹரியானாவிலும் காங்கிரஸ் ஏமாற்றம்தான். வெற்றி நிச்சயம் என்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி, சில மணி நேரங்கள் வரை நம்பிக்கையோடு இருந்த காங்கிரஸ் கட்சிக்கு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வினோஷ் போகட் உள்ளிட்ட பலரும் போராடி வென்றுள்ளனர். பத்தாண்டு கால ஆட்சி மீதான அதிருப்தி, விவசாயிகள் போராட்டம், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், அக்னிபாத் திட்ட எதிர்ப்பு உள்ளிட்ட காரணிகள் இருந்தும் வெற்றி கை நழுவியது எப்படி என்று காங்கிரஸ் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது. குறிப்பாக மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் 5 இடங்களை மட்டுமே பெற்ற நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஆம் ஆத்மியின் ஆட்டம்

ஜம்மு காஷ்மீரில் ஒரு இடத்தில் வென்ற ஆம் ஆத்மி கட்சி, ஹரியானாவில் 88 இடங்களில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. ஆனால், பல தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றி பறிபோக காரணமாக இருந்திருக்கிறது. கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு கிங் மேக்கராக இருந்த ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்தும் அவரது கூட்டணியும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். ஆனால், ஆம் ஆத்மி, ஜெஜெபி, இந்திய கம்யூனிஸ்ட், ஐஎன்டிஎல் மற்றும் 464 சுயேச்சைகள் என பாஜக அல்லது ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க, தனிப்பெரும்பான்மையுடன் ஹரியானாவின் அரியணையில் அமர்கிறது பாஜக.

குற்றம்சாட்டும் காங்கிரஸ்

தேர்தல் முடிவுகள் குறித்து குற்றச்சாட்டுக்களையும் காங்கிரஸ் தலைவர்கள் முன்வைக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 48 இடங்களையும், 39.9 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 39.3 சதவிகித வாக்குகளை பெற்று 37 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஏறத்தாழ சம அளவில் வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் தோல்வியடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு மட்டுமல்ல ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளையும், ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் தேர்தல் ஆணையம் ஏதோவொரு வகையில் பாஜகவின் வெற்றிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது’’ என்கிறார்.

தேர்தல் ஆணையத்தில் புகார் - ராகுல்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கூறுகையில், "தேர்தல் முடிவுகளை மாற்றி மாற்றி ஆணையம் அறிவிக்கிறது. இரண்டு மணி நேரம் எந்த முடிவும் வரவில்லை. ஹரியானாவின் தேர்தல் முடிவுகளை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கள நிலவரத்துக்கும் மக்கள் மன நிலைக்கும் மாறாக இருக்கிறது.’’ என்றார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், “ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இண்டியா கூட்டணியின் வெற்றி என்பது அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயக, சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி. ‘’ என்றவர், ‘’ஹரியானாவின் எதிர்பாராத முடிவுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். தொகுதிகளில் இருந்து வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க உள்ளோம்.’’ என்றும் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன?

கடந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநிலங்களின் தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெரும் என்கிற தோற்றம் இருந்தது. கருத்துக் கணிப்புகளும் அதையே வெளிப்படுத்தின. ஆனால், 3 மாநிலங்களிலும் முடிவு வேறாக இருந்தது. காங்கிரஸின் அலட்சியம், தொடரும் பெரியண்ணன் மனப்பான்மை உள்ளிட்டவையே இதற்கு காரணம். கூட்டணியை நாடி வந்த கட்சிகளுக்கு சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருந்தால், ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இப்போது கூட, ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி அதிகபட்சம் 12 இடங்கள் வரை கேட்டது. உடன்பாடு இல்லாமல், ஆம் ஆத்மி தனித்து போட்டியிட்டது. ஓரிடத்தில் கூட வெல்லவில்லை என்றாலும் பல இடங்களில் வெற்றியைத் தடுத்துள்ளதையும் சுட்டுக் காட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழ்நாடு கூட்டணி மாடல்

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஏற்பட்டது. திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட 12 கட்சிகள் உள்ளன. ஓரிரு கட்சிகளைத் தவிர பெரும்பான்மையான கட்சிகள் கூட்டணியில் தொடர்கின்றன. இந்த கூட்டணி ஒரு சட்டப்பேரவைத் தேர்தல், 2 மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. விமர்சனங்கள், கருத்து முரண்கள் எழுந்தாலும் கூட்டணி தொடர்கிறது. இதேபோன்றதொரு அணுகுமுறையை காங்கிரஸ் பிற மாநிலங்களில் தொடர வேண்டும் என்கிறார்கள். இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் குறித்து நியூஸ் 7 தமிழிடம் விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில் ‘’தேர்தல் முடிவுகள் ஒரு படிப்பினையாகயாக அமைந்திருக்கிறது. பாஜகவிற்கு எதிரான கட்சிகள் ஓரணியில் நிற்க வேண்டும். அதைத்தான் இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது’’ என்றார்.

பாஜகவின் கூட்டணிக் கட்சிகள்

பாரதிய ஜனதா கட்சி ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது. ஜம்மு காஷ்மீரில் வலிமையான எதிர்க்கட்சியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், கடந்த 2014ல் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்த மக்கள் ஜனநாயகக் கட்சி, இப்போது படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. மொத்தம் 81 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 3 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. சுமார் 9% வாக்குகளையும் பெற்றுள்ளது. ஹரியானாவில் கடந்த 2019ல் பாஜக கூட்டணி அரசில் துணை முதலமைச்சராகிய துஷ்யந்த் சவுதலா படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.

எனவே, மகராஷ்ட்ராவில் சிவசேனா, தமிழ்நாட்டில் அதிமுக மக்களவையில் மசோதாக்களுக்கு ஆதரவளித்த ஒடிஷாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என பாஜகவின் நேரடி, மறைமுக கூட்டணிக் கட்சிகள் அடுத்த தேர்தலில் தோற்கின்றன அல்லது கரைகின்றன என்கிற பிம்பம் தொடர்கிறது. அது குறித்த விமர்சனமும் எழுகின்றன. கூட்டணிக் கட்சிகளின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாஜகவிற்கும் இந்த தேர்தல் ஒரு படிப்பினையாக இருக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

Tags :
assembly electionsBJPCongressharyanaHaryana electionsINCIndiajammu kashmirJKNCndaNews7TamilResults
Advertisement
Next Article