ஆளுநர் தேநீர் விருந்து - திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு!
ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு குடியரசு தினத்திற்கான (ஜன.26) ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வு இன்னும் இரு தினங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை புறக்கணிக்கப்பதாக அறிவித்தார்.
இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றும் அதை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்றும் தெரிவித்திருந்தார்.