மாணவர்களை "ஜெய்ஸ்ரீராம்" என கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி - மனோ தங்கராஜ் கண்டனம்!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ‘கல்வி கூட்டமைப்புகளின் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் நிறைவு பரிசு விழா நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது மாணவர்களிடையே ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷத்தை எழுப்பிய ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி நான் சொல்கிறேன், நீங்களும் திரும்ப சொல்லுங்கள் என மாணவர்களிடம் ஜெய் ஸ்ரீராம் என கோஷத்தை முழக்கமிடக் கூறினார். பல சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் போட வைத்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட ஆளுநர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?
#getoutravi https://t.co/2uylThD26g
— Mano Thangaraj (@Manothangaraj) April 12, 2025
பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ" என்று பதிவிட்டுள்ளார்.