For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
01:17 PM Apr 15, 2025 IST | Web Editor
ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி
Advertisement

கடந்த 2016-2021ம் ஆண்டு காலகட்டத்திலான அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, ரூ.3 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ரவீந்திரன் என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். மேலும், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.

Advertisement

அந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், எஸ்.வி.என்.பட்டி அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைகள் தொடர்பான கோப்புகள் மொழி மாற்றம் தேவைப்படுவதால் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என ஆளுநர் தரப்பு கூறியுள்ளதாக தெரிவித்தார். அதற்கு, இந்த விவகாரத்தை ஆளுநர் தரப்பு தாமதப்படுத்துகிறார்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து வழக்கு தொடர்பான விவரங்களை தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதங்களாக முன்வைத்தார். குறிப்பாக கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் இவ்வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்றும் குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு விட்டது என்றும் வாதிட்டார். மேலும் குற்றப்பத்திரிகை தாக்கலாகி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சில அம்சங்கள் தொடர்பாக மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், பிரிவு 17ன் கீழ் Sanction நடவடிக்கை கேட்கப்பட்டு அதற்கான ஒப்புதலையும் ஆளுநர் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இதற்கு ரஜேந்திரபாலாஜி தரப்பு வழக்கறிஞர், கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற புலன் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மாற்றி உள்ளது என்றும், அப்படி என்றால் வழக்கு மீண்டும் முதலில் இருந்து விசாரணை நடைபெறுகிறதா? இது என்ன விதம் என கேள்வி எழுப்பினார்.

மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் நிலை என்ன? என வாதத்தை முன் வைத்ததோடு, புலன் விசாரணை முடிவடைந்த நிலையில் உயர்நீதிமன்றத்தால் எப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தார்.

இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள், ஆளுநரின் காலதாமதத்திற்காக மாநில காவல் துறையிடம் இருந்து வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஆளுநரின் தவறுக்காக நாங்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும், எனவும் தமிழ்நாடு காவல்துறை விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது தேவையற்றது எனவும் வாதிட்டார். இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி வழக்கு விவகாரத்தில் உள்ள கோப்புகளை இரண்டு வாரத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆளுநரிடம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்தனர். மேலும் இரண்டு வாரத்தில் தமிழ்நாடு அரசு மொழிபெயர்த்த கோப்புகளை வழங்கியதும் உடனடியாக, ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவி முடிவு எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Tags :
Advertisement