“நல்லாட்சி வென்றது” - பிரதமர் நரேந்திர மோடி!
தலைநகர் டெல்லியில் 70 தொகுதிக்காக சட்டபேரவை தேர்தல் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி 40 தொகுதிகளில் வெற்றி, 8 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் பாஜக உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 18 தொகுதிகளில் வெற்றி, 4 தொகுதிகளில் முன்னிலை என 22 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.
இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
பாஜகவின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி. பாஜகவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வணக்கமும் வாழ்த்துக்களும்... உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியின் வளர்ச்சியிலும், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லிக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதி செய்வதில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
இந்த மகத்தான வெற்றிக்கு இரவும், பகலும் உழைத்த எனது அனைத்து பாஜக தொண்டர்களையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போது டெல்லி மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் இன்னும் உறுதியாக, அர்ப்பணிப்புடன் இருப்போம்” என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.