For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொதுத் தேர்தல் : அமெரிக்கா vs இந்தியா - வித்தியாசங்கள் என்ன?

11:37 AM Feb 13, 2024 IST | Web Editor
பொதுத் தேர்தல்   அமெரிக்கா vs இந்தியா    வித்தியாசங்கள் என்ன
Advertisement

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த கட்டுரை....

Advertisement

ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று மக்களாட்சியாகும். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி முறைதான் ஒரு சிறந்த ஜனநாயக அரசாக இருக்க முடியும். உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவிலும் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

அமெரிக்காவின் பொதுத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 240 ஆண்டுகால பாரம்பரியம் உள்ளது. அதேபோல இந்தியாவிற்கு 70 வருட தேர்தல் பாரம்பரியம் உள்ளது. இந்த நிலையில் இரண்டு நாடுகளிலும் உள்ள தேர்தல் நடைமுறையில் பல வித்தியாசங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

அரசியல் கட்சிகள்

அமெரிக்காவில் அரசியல் கட்சிகள் இரண்டு முக்கியமான பிரிவுகளை மட்டுமே கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று ஜனநாயக கட்சி மற்றொன்று குடியரசு கட்சி. இந்த இரு பெரும் கட்சிகளிலும் பல்வேறு சித்தாந்தங்களை கொண்ட நபர்களும் அங்கம் வகிப்பார்கள். தேர்தல் நேரங்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கட்சியினரே பொது விவாதம் நடத்தி அதன் மூலம் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த பின்னரே அவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள். இதேபோல சுதந்திர கட்சி மற்றும் பசுமை கட்சி போன்ற சிறிய சிறிய கட்சிகளும் உள்ளன. ஆனால் இவை சுயேட்சையாகவே கருதப்படும்.

ஆனால் இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் உள்ளன.  சுதந்திரத்திற்கு பின்னர் வலுவாக இருந்த கட்சிகள் பல  கட்சிகள் இன்று காணாமல் சென்றுள்ளன. இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் முக்கிய கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சி மற்றும் தற்போது ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போன்ற பல்வேறு தேசிய கட்சிகள் உள்ளன. அமெரிக்காவில் உள்ளதைப் போல இரண்டு பெரிய கட்சிகளை போல் அல்லாமல் மூன்றாவது அணிகள் ஆட்சி செய்த வரலாறும் இந்திய அரசியலுக்கு உண்டு. இதேபோல தமிழ்நாட்டில் திமுக அதிமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளும் உள்ளன.

வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்களிக்கும் முறை

அமெரிக்காவில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் முறை அல்லது நிர்வகிக்கும் முறை என்பது பரவலாக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த மாகாணங்களே நிர்வகிக்கின்றன. அதேபோல தேர்தலில் வாக்களிப்பதற்கு குறிப்பிட நாட்கள் வழங்கப்பட்டு நேரிலோ அல்லது ஆன்லைன் வாயிலாகவே வாக்களிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. அமெரிக்க மாகாணங்களிலும் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கலாம். அதாவது மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Portal மூலம் வாக்களிக்கும் முறை அமெரிக்காவில் உள்ளது.

இந்தியாவில் வாக்காளர் பட்டியலை தயாரிப்பது முதல் அதனை இறுதி செய்வது,  மற்றும் தேர்தல்களை நடத்துவது உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அளவில் செயல்படும் ஒரு சுதந்திரமான அமைப்பான தேர்தல் ஆணையம்தான் நிர்வகிக்கிறது. இந்தியாவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் தேர்தல் மின்னணு இயந்திரங்கள் வாயிலாக நடத்தப்படுகிறது. நகர்மன்ற மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் அனைத்தும் வாக்குச் சாவடி பெட்டிகள் மூலமே நடைபெறுகிறது. அதேபோல அரசு ஊழியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் அஞ்சல் வாக்களிக்கும் முறையில் வாக்களிக்கிறார்கள்.

 நிதி மேலாண்மை 

அமெரிக்க தேர்தலில் பிரச்சாரத்திற்கான நிதியுதவிகள்  தனிநபர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அரசியல் குழுக்களிடம் இருந்து பெறப்பட்ட   நன்கொடைகளால் நிதியளிக்கப்படுகின்றன.  தேர்தலில் இவ்வளவுதான் வேட்பாளர் செலவு செய்ய வேண்டும் என்கிற பெரிய அளவிலான நெருக்கடிகள் இல்லை.

அதேநேரத்தில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தனிப்பட்ட நன்கொடைகள், நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் நிதிகள் போன்ற முறையாக கணக்கிடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. அதிகப்படியான செலவினங்களைக் கட்டுப்படுத்தவும்,  வேட்பாளர்களை சமநிலையை மேம்படுத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கான செலவு வரம்பு ₹54 லட்சத்தில் இருந்து ₹75 லட்சமாகவும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. அதேபோல மாநிலத்தைப் பொறுத்து பெரிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு  ₹70 லட்சம் முதல் ₹95 லட்சமாக  வரையறை உயர்த்தப்பட்டது.  அதேபோல சட்டமன்ற தொகுதிகளின் வரம்புகள் ₹20 லட்சத்தில் இருந்து ₹28 லட்சமாகவும்,  பெரிய மாநிலங்களின் உள்ள தொகுதிகளுக்கு ₹28  லட்சம் முதல் ₹40  லட்சம் வரையறையை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

தேர்தல் கண்காணிப்பு

அமெரிக்காவில் அரசு சாரா நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களால் தேர்தல்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறது.  இதன் மூலம் தேர்தல்களின்போது பார்வையாளர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நடைமுறை உறுதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல்களை கண்காணிக்கவும், நியாயமான நடத்தை மற்றும் தேர்தல் விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் பார்வையாளர்களை நியமிக்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சொந்த முகவர்களை வாக்குச் சாவடி மையங்களில் நியமிக்கும் வழக்கமும் இந்தியாவில் உண்டு.

 தேர்தல் முடிவுகள் :

அமெரிக்க தேர்தல் முறையில் வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள்  அறிவிக்கப்படும். அதன்பின்னர் சான்றிதழ் அளிக்கப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் பதவி ஏற்கிறார். இதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கான பதவியேற்பு விழா
நடைபெறும்.

இந்தியாவில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அந்தந்த அலுவலகங்களிலே அதற்கான சான்றிதழ்களை பெற்றுக்கொள்வார்கள்.  இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையாக வெற்றி பெற்ற கட்சியினரால் தேர்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவை அறிவிக்கப்படும்.

Tags :
Advertisement