சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை!
சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
தொடர்ந்து, காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் பேசுகையில் கூறியதாவது:
- “ரூ.1,100 கோடி மதிப்பில் கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மைக்கப்டும்.
- கல்லணை கால்வாயை நீட்டித்தல் மற்றும் புனரமைப்பதற்கு ரூ.400 கோடி மதிப்பில் 2ம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்
- தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 13,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
- அரசுசார் இணைய வழி சேவைகளை மேலும் துரிதமாகக் கொண்டு செல்ல, எல்காட் ரூ.200 கோடி மதிப்பீட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும்.
- சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும்.
- மதுரையில் தொழில் புத்தாக்க மையம் ரூ.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- மதுரையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.118 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.20,198 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு ரூ.843 கோடி மற்றும்
- இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மருத்துவ செலவுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
- ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நீர் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.