"அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விலையில்லா பட்டுச் சேலை வழங்கப்படும்’’ - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணம் தொடங்கியிருக்கும் நிலையில் இன்று நெசவுத் தொழிலாளர்கள் மற்றும் சௌராஷ்டிரா சமுதாய பிரமுகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தின்போது நெசவுத் தொழிலாளர்களும், பிரமுகர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இக்கூட்டத்தின் இறுதியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம். நெசவுத் தொழில் கடினமான தொழில். நேற்றைய தினம் திருபுவனம் பகுதியில் ஒரு நெசவாளர் வீட்டுக்கு சென்று பார்வையிட்டேன்.
இந்த துறையில் உள்ள குறைகளை கேட்டறிந்தேன். இந்த பகுதியைப் போலவே எங்கள் பகுதியிலும் நெசவாளர்கள் இருக்கிறார்கள். அதனால் நெசவாளர்களிடம் எனக்கு ஈடுபாடு அதிகம். எங்கள் பகுதியில் கைத்தறி நெசவுத் தொழில் வளர்ந்திருக்கிறது. ஒரு சேலை இரண்டரை லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிந்தாமணி என்ற பகுதியில் மெயின் ரோட்டில் சதுரடி 25,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த அளவுக்கு அப்பகுதி முன்னேறி இருக்கிறது. பெரிய கடைகளை போட்டு ஹோல்சேல் வியாபாரம் செய்கிறார்கள். அங்குள்ள நெசவுத் தொழிலாளர்களே இன்று முதலாளிகாளாக வளர்ந்திருக்கிறார்கள். அதற்கு அவர்களின் அர்ப்பணிப்பும் ஒரு முக்கிய காரணம்.
கும்பகோணத்தில் பட்டு நெசவுத் தொழில் குலத்தொழிலாக இருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். நான் முதல்வராக இருந்த காலத்தில் கைத்தறி தொழிலாளர்கள் அதிக துணியை நெய்ததால் அவை அதிகமாக தேங்கியது. அதனால் அதை அதிகமாக விற்க தள்ளுபடி வழங்க வேண்டும் என்று கேட்டார்கள். நான் 300 கோடி ரூபாயை விடுவித்து அந்த துணிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தேன்.
நெசவாளர் கூட்டுறவு சங்கம் வலிமையாக இருக்க பல்வேறு சலுகைகளை எங்கள் ஆட்சிக் காலத்தில் செய்து கொடுத்தோம். பட்டு நெசவு தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் விதமாக அம்மா கொண்டுவந்த தாலிக்கு தங்கம் என்ற திருமண உதவித் திட்டத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிக்கு அரசாங்கமே விலையில்லா பட்டுச் சேலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறி வந்தால், கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் அதனால் 2 பிரிவினரையும் பாதிக்காமல் சரிசமமாக நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஏழை நெசவாளர்களுக்கு தரமான பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
அம்மாவின் ஆட்சியில் கைத்தறிக்கு 200 யூனிட், விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் மானியமாக கொடுத்தோம், பள்ளி மாணவர்களுக்கு சீருடை கொடுத்தோம். முன்பெல்லாம் கைத்தறி தொழிலாளர்கள் துணியை நெசவு செய்து கூட்டுறவு சங்கத்தில் கொடுத்த உடனேயே அதற்கான கூலி வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அந்த பணம் வங்கியில் செலுத்தப்படுவதால் 10 நாள் அல்லது 15 நாள் கழித்துதான் கிடைக்கிறது. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினையை எடுத்து சொன்னோம். அதற்காக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
எங்கள் ஆட்சி அமைந்தால்; மீண்டும் நெசவாளர்களுக்கு உடனடியாகக் கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலத்தில் நெசவுத் தொழிலில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்று கூறி இருக்கிறீர்கள். அந்த காலத்தில் உதவித் தொகை கேட்டிருக்கிறீர்கள் அதுபற்றி பரிசீலிப்போம். கைத்தறியில் உற்பத்தியாகும் துணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கிடைக்க மத்திய அரசிடம் பேசுவோம். குறைந்த வட்டியில் கடன் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளீர்காள்.
அதை கவனக்த்தில் கொண்டு செயல்படுவோம். எங்கள் அரசு அமைந்தவுடன் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்கள் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். விவசாயம் போன்றதுதான் நெசவுத் தொழிலும். அது மிகவும் கடினமான தொழில். காலம் மாற மாற எல்லா தொழிலும் மாறுகிறது. அதேபோல் நெசவுத் தொழிலிலும் நவீனமாக மாறவேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படி நீங்கள் மாறுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த நாங்கள் தயாராக இருப்போம்'' என்று
தெரிவித்துள்ளார்.