"கட்டணமில்லா பேருந்து வசதி, கூண்டு கிளிகளுக்கு சிறகை கொடுத்தது போல் உள்ளது" - ப.சிதம்பரம் பேச்சு
கட்டணமில்லா பேருந்து வசதி என்பது கூண்டு கிளிகளுக்கு ஒரு சிறகை கொடுத்தது போல் மகளிருக்கு உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில்தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
"கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. கடந்த வெற்றி போல் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பாஜக அரசு இந்த முறை ஆட்சி பிடித்தால் அடுத்த முறை தேர்தல் நடைபெறுமா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசின் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை நடுத்தர மக்களை தொடர்ந்து பாதித்து வருகிறது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் 45 ரூபாய், டீசல் 40 ரூபாய் குறைக்கிறோம் என்று சொன்னார்கள், ஆனால் செய்யவில்லை. ஒவ்வொரு நபரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவேன் என்று கூறினார்கள், அதையும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை 450 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 75 ரூபாயாகவும் இருந்தது.
விலைவாசி பற்றி பிரதமர் மோடி எப்போதும் கண்டுகொள்வது இல்லை. நினைவில் வைக்கிற அளவிற்கு பாஜக ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை நிதி கொடுக்க வில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் நிவாரண நிதி என்ற திட்டத்தை கொண்டு வந்தோம்.
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 7.5 சதவீதம் அதிகரித்தது. ஆனால் பாஜக ஆட்சியில் 5.8 சதவீதம் மட்டும் தான் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் மகளிர் உரிமை தொகை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டணமில்லா பேருந்து வசதி என்பது கூண்டு கிளிகளுக்கு ஒரு சிறகை கொடுத்தது போல் மகளிருக்கு உள்ளது. இத்திட்டத்தினால் பெண்கள் சிறகை விரித்து பறந்து வருகின்றனர்."
இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.