For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசியலில் இருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

07:10 PM Mar 03, 2024 IST | Web Editor
அரசியலில் இருந்து விலகினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
Advertisement

முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில், டெல்லியின் தற்போதைய எம்பிக்களான ஹர்ஷ் வர்தன், பர்வேஷ் வர்மா, ரமேஷ் பிதுரி, மீனாட்சி லேகி ஆகிய 4 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியலைவிட்டே விலகுவதாக முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் அரசியலில் இருந்திருக்கிறேன். ஐந்துமுறை சட்டமன்றத் தேர்தல்களிலும், இரண்டுமுறை மக்களவைத் தேர்தல்களிலும் மகத்தான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன். கட்சியிலும், டெல்லி மாநில அரசிலும், மத்திய அரசிலும் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்துள்ளேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கான்பூரில் உள்ள GSVM மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பில் சேர்ந்தபோது, ஏழைகளுக்கு உதவ வேண்டும், மனித குலத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோள். இதயத்தில் நான் ஒரு ஸ்வயம்சேவகர்(ஆர்எஸ்எஸ் உறுப்பினர்). வரிசையில் கடைசியாக நிற்கும் மனிதனுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தீன் தயாள் உபாத்யாயாவின் தத்துவத்தின் தீவிர ரசிகனாக இருந்தேன். அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைமையின் வற்புறுத்தலின் பேரில்தான் நான் தேர்தல் களத்தில் குதித்தேன். எனக்கு அரசியல் என்பது நமது மூன்று முக்கிய எதிரிகளான வறுமை, நோய் மற்றும் அறியாமை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பே.

எனது அரசியல் பணி என்பது, வருத்தமில்லாமல் சாமானியர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது ஆர்வத்தை தணித்த ஒரு அற்புதமான இன்னிங்ஸ். டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சராகவும், இரண்டு முறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினேன். அவை என் மனதுக்கு நெருக்கமான ஒரு விஷயம். போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு உழைக்கவும், கோவிட்-19 உடன் போராடிய கோடிக்கணக்கான நமது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைப் பேணவும் உதவக்கூடிய அரிய வாய்ப்பு அதன்மூலம் கிடைத்தது. மூன்று தசாப்தங்களாக நீடித்த இந்த குறிப்பிடத்தக்க பயணத்திற்கு பங்களித்த எனது கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்திய வரலாற்றில் மிகவும் ஆற்றல் மிக்க பிரதமரான நரேந்திர மோடியுடன் நெருக்கமாகப் பணியாற்றியதை ஒரு பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். அவர் மீண்டும் ஆட்சிக்கு வர நாடு வாழ்த்துகிறது. புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராகவும், காலநிலை மாற்றத்திற்கு எதிராகவும், எளிய மற்றும் நிலையான வாழ்க்கை முறைகளை கற்பிப்பதற்காகவும் எனது பணிகளை நான் தொடர்வேன். நான் செல்கிறேன். என்னால் காத்திருக்க முடியாது. நான் இன்னும் பல மைல்கள் செல்ல வேண்டும். எனக்கு ஒரு கனவு இருக்கிறது. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என்னுடன் இருக்கும் என்று எனக்குத் தெரியும். டெல்லியின் கிருஷ்ணா நகரில் உள்ள எனது ENT கிளினிக் எனக்காக காத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement