என் பேச்சு திரிக்கப்படுகிறது - நியூஸ்7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரத்யேக பேட்டி: என் பேச்சு திரிக்கப்படுகிறது!
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் பேசிய கருத்துகள் திரித்துக் கூறப்படுவதாகவும், அதிமுகவின் எழுச்சி எதிர்க்கட்சிகளை அச்சமடையச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
1998-ல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து அரசை கவிழ்த்தது வரலாற்றுப் பிழை என தான் பேசியதாக சில ஊடகங்களில் வெளியாகி வருவது குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்தார். "நான் பேசியது திரித்துக் கூறப்பட்டு வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் பேச்சை திரித்து வெளியிட்டு வருகின்றனர்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தன்னெழுச்சியாக மக்கள் எடப்பாடியாரின் சுற்றுப்பயணக் கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
மேலும், எங்களின் எழுச்சிப் பயணக் கூட்டத்தைப் பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சம் அடைந்துள்ளனர். எடப்பாடியார் இந்தத் தேர்தல் சுற்றுப்பயணத்தின் முடிவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற பயம் திமுகவிற்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
1998-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். மாற்றுக் கருத்து ஜெயலலிதா அவர்களுக்கு இருந்ததால், 1999-ல் தமிழக நலன் கருதி நாங்கள் கூட்டணியை விட்டு வெளியே வந்தோம். அதை பயன்படுத்தி திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து திமுகவை வளர்த்துக் கொண்டார்கள்" என்று கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் அது தீண்டத்தகாத கட்சியா என்று நான் கூறியதை இரண்டு நாட்கள் கழித்து திரித்துக் கூறப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், இது பாஜக-அதிமுகவிற்கு இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி அச்சத்தின் வெளிப்பாடாகப் பார்க்கின்றேன் என அவர் தனது பேட்டியில் மேலும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கடம்பூர் ராஜூவின் இந்த கருத்துகள் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.