ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு - காங்கிரஸ் தலைவர் கார்கே, எம்.பி. ராகுல் காந்தி இரங்கல்!
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி எம்.பி. உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் இன்று காலை மணியளவில் பிரிந்தது என்று அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே ஈவிகேஎஸ்ஸின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
ஒரு நேர்மையான மற்றும் தைரியம்மிக்க தலைவராக ஒருமித்த கருத்துகளை உருவாக்குபவராக அவர் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கான கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர், தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் பணியாற்றினார். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி, “முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அன்புக்குரியவர்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். துணிச்சலான, கொள்கைப் பிடிப்புள்ள தலைவராக இருந்த இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கான உறுதியான ஆதரவாளராக இருந்தார். தமிழக மக்களுக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் என்றென்றும் உத்வேகம் அளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி: முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஸ் இளங்கோவன் மறைவால் நாங்கள் மிகவும் துயரமடைகிறோம். துணிச்சல் மிக்க தலைவரான அவர், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பணியாற்றினார். மக்கள் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்.
அவரின் முற்போக்கான மற்றும் ஜனநாயக சிந்தனைக்கான அவரின் அர்ப்பணிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். இந்த இக்கட்டான தருணத்தில் அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு எங்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.