தவறுதலாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி - பெயர் நீக்கம் செய்யப்பட்டு அறிக்கை வெளியீடு!
இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் பெயரை நீக்கம் செய்து, அறிவிப்பை மக்களவை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதே போன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவர் தாக்குதல் நடத்தினர். இவர்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல கட்ட சோதனைகளை கடந்து மக்களவைக்குள் புகைக் குப்பிகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மக்களவையில் பாதுகாப்பு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட 5 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையான் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என் பிரதாபன். ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய 5 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, எம்.பி.க்கள் கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத் ஆகிய 9 எம்.பி.க்கள், மக்களவையில் இருந்து கூட்டத்தொடர் நிறைவுபெறும் வரை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் உடல் நலக்குறைவால் விடுமுறை எடுத்துள்ளதாகவும், ஆனால் அவரையும் தவறுதலாக இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக அவரது பெயரை நீக்கம் செய்து, அறிவிப்பை மக்களவை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.