கோவையில் இபிஎஸ் ரோடு ஷோ - மக்கள் உற்சாக வரவேற்பு
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, பாஜக - அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர். திமுக கூட்டணியில் விசிக, காங்கிரஸ், மநீம, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்துப் போட்டியிட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சமீபத்தில் நடைபெற்ற செயல்குழு கூட்டத்தில் திமுக, பாஜகவுடன் அமைக்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் கோவை மேட்டுப்பாளையத்தில் இன்று காலை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பின்னர், கோவை தேக்கப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள், செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிலையில், கோவை மேட்டுப்பாளையத்தில் பேருந்து மூலம் இபிஎஸ் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில், பாஜக மாநல தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட அதிமுக, பாஜக தொண்டர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். அப்போது, சாலைகளில் காத்திருந்த மக்களும், தொண்டர்களும் அவரது வாகனத்தின் மீது மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.