For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லஞ்ச ஒழிப்புத்துறையால் கைதான அமலாக்கத்துறை அதிகாரி - யார் இந்த அங்கித் திவாரி?

12:16 PM Dec 02, 2023 IST | Jeni
லஞ்ச ஒழிப்புத்துறையால் கைதான அமலாக்கத்துறை அதிகாரி   யார் இந்த அங்கித் திவாரி
Advertisement

லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமலாகத்துறை அதிகாரி அங்கித் திவாரி யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வந்த அங்கித் திவாரி கடந்த அக்டோபர் 29-ம் தேதி,  திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரான சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  அப்போது மருத்துவர் சுரேஷ் பாபு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை சுட்டிக் காட்டி, அவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும்,  அக்டோபர் 30- ம் தேதி மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வர வேண்டும் என்றும் மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி அவரின் காரிலேயே ஏறிக்கொண்டு,  நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி தரவேண்டும் என்றும்,  தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்து விட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தர வேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னர் கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி அரசு மருத்துவர் சுரேஷ் பாபு,  முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அங்கித் திவாரியிடம் வழங்கியுள்ளார்.  தொடர்ந்து மேல் அதிகாரிகளுக்கும் பங்கு தரவேண்டி உள்ளதால்,  பேசியபடி முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தர வேண்டும்,  இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வாட்ஸ்அப் மூலமும்,  குறுஞ்செய்திகள் மூலமும் அங்கித் திவாரி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு,  கடந்த நவம்பர் 30-ம் தேதி,  திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.  முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத்துறை அதிகாரி என்றும்,  தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரிய வந்தது.

இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  இரண்டாவது தவணையாக திண்டுக்கல்லில் வைத்து ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டபோது,  அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும்,  களவுமாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடத்தினர். தொடர்ந்து மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

சுமார் 13 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனிடையே லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

யார் இந்த அங்கித் திவாரி?

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக உள்ள அங்கித் திவாரி, 2016-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார்.  இவர் முன்னதாக குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.  மத்தியப் பிரதேசத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம், மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement