ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை!
டெல்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் மற்றும் ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளனர்.
நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல்முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜன.29,31 ஆகிய தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், சொந்த வேலையாக ஜார்க்கண்ட் முதல்வர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில் அவரது இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 13 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் முதல்வர் சோரனின் வீட்டில் ரூ.36 லட்சம் ரொக்கம், பினாமி பெயரில் ஹரியாணாவில் பதிவுசெய்யப்பட்ட பிஎம்டபிள்யு கார், ஆவணங்கள் சிலவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.