‘என் மண், என் மக்கள்’ யாத்திரை ஊழல் வாதிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் யாத்திரை ஊழல் வாதிகளுக்கு மிகப்பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், 40 உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழலில் என் மண் என் மக்கள் இன்று சென்னையில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க சென்னை வந்தடைந்தார். அவரை அண்ணாமலை, வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றனர். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வள்ளலார் நகர், தங்க சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்ஜெ.பி.நட்டா, அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழா மேடையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது,
“என் மண், என் மக்கள் பாத யாத்திரையை தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய யாத்திரை. பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவராக இருந்து வருகிறார். 400 தொகுதிகளில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையாக மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த யாத்திரை திமுகவுக்கு, ஸ்டாலினுக்கு, ஊழல் வாதிகளுக்கு மிகப்பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த யாத்திரை மூலம் 40 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம். பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மேல் எந்த அளவிற்கு பாசத்தை வைத்திருக்கிறார்கள் என்றால், ஐநா சபையில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என சொன்னார். தமிழ் பாரம்பரியமான செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.
நாம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என சொன்னது பாஜகவின் இலக்கு. அதனை செய்து இன்று கோடிக்கணக்கான மக்கள் ஜெய் ஶ்ரீராம் என முழக்கம் எழுப்புகிறார்கள்” என தெரிவித்தார்.