பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!
புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர் பேரரசர் சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையர். ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட இவர், முத்தரையா் இன முதல் பேரரசர் ஆவார். இவரது நினைவாக தபால்தலை வெளியிட வேண்டுமென அந்த சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழக அரசு சார்பிலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் துணை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலையை வெளியிட்டார்.
https://x.com/EPSTamilNadu/status/2000444915348820168
இந்த நிலையில், பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு தபால் தலை வெளியிட்டதற்காக பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் தமிழக மக்களின் சார்பிலும், அதிமுக சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.